ரூ. 50 நாடகத்தின் இரண்டாம் பாகம் விரைவில்! இ.தொ.கா. சாடல்

” 50 ரூபா கிடைக்காவிட்டால் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோம்.” என  மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றி –  மக்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏமாற்றக்கூடும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பாதீட்டின் ஊடாக நாளொன்றுக்கு 50 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும் என மலையக அமைச்சர்கள் உறுதியளித்தனர். அந்த உறுதிமொழி இன்று நிறைவேற்றப்படவில்லை. திட்டமிட்ட அடிப்படையில் தோட்டத்தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்திற்கு மேலதிகமாக அரசாங்க நிதியிலிருந்த நாளொன்றுக்கு 50 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான அறிவிப்பு பட்ஜட்டில் வெளிவரும் என முற்போக்கு கூட்டணி தலைவர்கள் சூளுரைத்தனர்.

எனினும், இது தொடர்பாக பாதீட்டு உரையில் நிதி அமைச்சர் எவ்வித அறிப்பையும் வெளியிடவில்லை. இந்த விடயம் குறித்து தேயிலை சபையுடன் பேசவுள்ளேன் என்று மட்டுமே குறிப்பிட்டார். எனவே, மலையக அமைச்சர்கள், பொய்கூறி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளமை இதிலிருந்து தெளிவாகின்றது.

அத்துடன், தொழிலாளர்களின் சம்பள விடயத்தை வைத்து அரசியல் நாடகம் நடத்தி வந்தவர்களின் கபடத்தனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனவே, 50 ரூபா கிடைக்காவிட்டால் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுவோம், பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என்று கூறி மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்றாமல், தொழிலாளர்களிடம் முற்போக்கு கூட்டணி மன்னிப்புகோர வேண்டும்.” என்றார் கணபதி கனகராஜ்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *