மின் கட்டணப் பட்டியலை வழங்க மாற்றுவழி!



மின்சாரக் கட்டணங்களை வழங்குவதில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த, முன் அச்சிடப்பட்ட கட்டணபட்டியலை வழங்கும் முறைக்குப் பதிலாக, புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் நுகர்வோருக்கு மாதாந்த மின் கட்டணங்களை வழங்குவதில் புதிய முறைகளை நடைமுறைபடுத்தவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

துண்டுச்சீட்டு முறைமை

அதற்கமைய, மின்வாசிப்பின் பின்னர், ஏதேனும் காரணங்களுக்காக பற்றுச்சீட்டு தேவைப்படும் நுகர்வோருக்கு தெர்மல் பிரின்டிங் முறையிலான உடனடி துண்டுச்சீட்டு வழங்கப்படும்.

குறுந்தகவல் முறைமை

மின்வாசிப்பு பெறப்பட்டதன் பின்னர், மாதாந்த மின்சாரக் கட்டணம் இலங்கை மின்சார சபையில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும்.

இதற்கான பதிவினை பெற, வீட்டுக்கு வளாகத்திற்குவரும் மின்மானி வாசிப்பாளரின் ஆதரவைப் பெறலாம் அல்லது REG <இடைவெளி> பத்து இலக்க மின்சாரக் கணக்கு எண் என்றவாறு உள்ளீடு செய்து 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

கைப்பேசி செயலி மூலமான கட்டண விபரம்

CEB Care கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி மாதாந்திர மின்வாசிப்பின் பிறகு கட்டண விபரத்தை பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.

நுகர்வோருக்கு வினைத்திறனான சேவையை வழங்கவதற்கும், நிறுவன நடவடிக்கைகளை கணினிமயப்படுத்தும் நோக்கிலும் இந்த மூன்று புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக கட்டண விபரங்களை பெறும் நான்காவது முறையாக, மின்னஞ்சல் மூலமான பற்றுச்சீட்டை வழங்கும் வசதிகளை முன்னெடுக்க தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் காகிதத் தட்டுப்பாடு காரணமாக மின் கட்டணத்தை முன்கூட்டியே அச்சிட்டப்பட்ட பற்றுச்சீட்டு மூலம் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *