மன்னார் மனிதப் புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில்! – அது குறித்து இரகசியம் பேணத் தீர்மானம்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளின் கார்பன் ஆய்வு அறிக்கைகள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

6 மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில் 5 மாதிரிகளின் காபன் அறிக்கைகளே கிடைக்கப் பெற்றன என்றும், அவை மன்னார் நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் சண்முகநாதன் துளசிகனிடம் கையளிக்கப்பட்டன என்றும் சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மன்னார் நுழைவாயில் சதோச வளாகத்தில் மனிதப் புதைகுழி ஒன்று கண்டறியப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரை 323 மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில் தெரிவுசெய்யப்பட்ட எலும்புக்கூடுகளின் 6 மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு றேடியோ கார்பன் அறிக்கைகள் பெறப்பட்டன.

எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட காலத்தைக் கண்டறியும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகளே ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் நேற்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. 6ஆவது அறிக்கையும் கிடைத்தவுடன், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும் எனச் சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

“காபன் அறிக்கைகள் எனக்குக் கிடைத்தன. 6 மாதிரிகளை நாங்கள் ஒப்படைத்தோம். அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கிடைத்தன.

இந்த அறிக்கைகளை நான் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். அவை மிகவும் இரகசியத்தன்மை வாய்ந்தவை.

மன்னார் நீதிமன்றம் இது குறித்து தீர்மானம் எடுக்கும்” – என்று நேற்றைய ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் நேற்று 147ஆவது நாளாகவும் தொடர்ந்தன.

இதுவரை 323 மனித எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில், 314 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 28 மனித எச்சங்கள் சிறுவர்களுடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *