பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் சந்தேகம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் – தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் – கடந்த முறை சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் – மற்றும் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் – இம்முறை சம்பள உயர்வு விடயத்தில் – சம்பள நிர்ணய சபை நடந்து கொள்ளும் விதம் தொடர்பிலும் பாரிய – பரஸ்பர வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

இம்முறை, கடந்தமுறை போன்ற நடைமுறை இன்றி – நேரடியாக தொழில் ஆணையாளரால் – பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் – நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதுவும் கடந்த மே 1 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று
உலகம் முழுக்க தொழிலாளர்களின் உரிமைகளையும் – அந்த உரிமைகளை பெறுவதற்காக – தொழிலாளர்கள் செய்த அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் நினைவு கூர்ந்து கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், – மலையகத்தில் தொழிலாளர் தின கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் இந்த வர்த்தமானி அறிவித்தல் குறித்து அறிவிப்பு விடுத்தமை பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
யாரை ஏமாற்றுவதற்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது என்ற கேள்வி – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது தொடக்கம் – இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. “விளம்பர அறிவிப்பாகவே” இதனை பார்க்க முடிகிறது

காரணம், அப்படியே பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு – அரசாங்கத்திற்கு உண்மையான கரிசனை இருந்திருந்தால் – ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் 1700 ரூபா வழங்க வேண்டும் என அறிவிப்பு கொடுத்த மறுநாள் – அல்லது ஒரு வாரத்தில் சம்பள நிர்ணய சபையால் அல்லது தொழில் ஆணையாளரால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான பின்னர் உடனே அதனை வழங்க முடியாது என பெருந்தோட்ட கம்பெனிகள் அறிவித்துவிட்டன.
அப்படி இருக்கையில், கடந்த மூன்று நான்கு மாதங்களாக இழுத்தரடிப்பு செய்து – இதோ வருகிறது – அதோ வருகிறது என திகதிகளை மாற்றி- மாற்றி அறிவித்து – மக்களை ஏமாற்றி – தொழிலாளர் தினத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதா ? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

கடந்த முறை, சம்பள நிர்ணய சபையால் – ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு – வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், சுமார் ஒரு வருடங்களின் பின்னரே – அது தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது. அதே நிலை, , இந்த 1700 ரூபாய் சம்பள உயர்வுக்கும்
ஏற்படப் போகிறதா ? என்ற அச்சம் இன்று எழுந்துள்ளது.

காரணம், வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் பெருந்தோட்ட கம்பெனிகள் தாங்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் – தொழில் திணைக்களம் தங்களுடன் கலந்துரையாடாமல் – இவ்வாறான ஒரு வர்த்தமானியை வெளியிட்டிருப்பதாகவும் – இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

எனவே, “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும்” வேலை செய்யும் இந்த அரசாங்கம் – பெருந்தோட்ட கம்பெனிகளை
நீதிமன்றத்திற்கு செல்ல வழிவிட்டு – விட்டு, தொழிலாளர்களுக்கு வெறுமனே
1700 ரூபாய் என்ற வர்த்தமானியை மாத்திரம் காட்டி – ஏமாற்று நாடகம் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றி உள்ளது – என்றே தோன்றுகிறது. !
கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் எதற்கு ?
சர்வதேச சந்தையில் தேயிலை விலை அதிகரித்துள்ளது. இலங்கையிலும் தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே, இதன் மூலம் வரும் இலாபத்தின் பங்குகளை பெருந்தொட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை தேயிலை ஏற்றுமதியின் ஊடாக 104 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றது. ஆனால், 2024 ஆம் ஆண்டு அதே பெப்ரவரி மாதத்தில் தேயிலை ஏற்றுமதி ஊடாக இலங்கை 127 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றுள்ளது.
இந்த ஒரு வருட காலகட்டத்தில், தேயிலை பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் உரம் மற்றும் கிருமிநாசினிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்படி இருக்கையில் ஈட்டிய லாபத்தின் ஒரு பங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு உள்ள பிரச்சினை என்ன ? என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
இதுவரை காலமும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, அவர்களின் ரத்தம், வியர்வையின் ஊடாக ஈட்டிய லாபத்தை முதலீடு செய்தது போதாதா ?.
ஆகவே, சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் அடுத்ததாக – எடுக்க உள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அமைச்சர் அல்லது தரப்பினர் இந்த பாராளுமன்றத்தின் ஊடாக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் அமைய உள்ள எமது ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் – பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவது என்ற திட்டத்தை முன் வைத்துள்ளோம்
அதனை செயல்படுத்துவதற்கு தனியான “ஜனாதிபதி செயலணி” உருவாக்குவதாக சஜித் பிரேமதாச அவர்கள் உறுதி அளித்துள்ளார்.
எனவே, தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தற்போது அவர்கள் கொழுந்து பறிக்கும் தேயிலை தோட்டங்களை பிரித்துக் கொடுத்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்கள் ஆக்கி அதனூடாக அவர்களுக்கான வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முறைமையாகும்.
இதேபோன்று இந்த பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு பிரச்சனைக்கு தாங்கள் முன்வைக்கும் நிரந்தர தீர்வு என்ன ? என்பதை இந்த அரசாங்கமும் – அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் தெளிவாக அறிவிக்க வேண்டும்.

மாறாக பொய்களைக் கூறி – நாடகங்களை அரங்கேற்றி பெருந்தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்து ஏமாற்றக்கூடாது ! என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இந்த அரசாங்கத்தால் மலையகத்தில் வெளியிடப்பட்ட படம் மக்களுக்கு ஏமாற்றம் அளித்து, படுதோல்வி அடைந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை பெருந்தோட்ட தொழிலா ளர்களின் சம்பளம் தொடர்பான திரைப்படம் வெளிவரும்
2024 ஆம் ஆண்டும் அத்திரைப்படம் வெளியீடப்பட்டுள்ளது
தோல்வியடைந்த மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ள திரைப்படமாகும்
ஆனால், படத்தின் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் இதன் ஊடாக பாரிய லாபம் பெறுவார்கள். அதுதான் புரியாத புதிராக இருக்கிறது

ஆகையால் மக்களுக்கு ஏமாற்றம் அளித்து – ரசிகர்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டு படுதோல்வி அடைந்தும் – தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு அமோக லாபம் கொடுத்த புதுமையான படமாக இந்த ‘1700 ரூபா‘சம்பள உயர்வு வர்த்தமானி’’ படம் அமைந்துள்ளது
‘என்பதை இந்த பாராளுமன்றத்தின் ஊடாக அறிவித்துக் கொண்டு………

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அரங்கேறும் இந்த ஏமாற்று நாடகத்திற்கு முடிவு கட்டவேண்டும்
அரசாங்கமும் – பெருந்தோட்ட கம்பெனிகளும் முன்னேடுக்கப்படும் கூட்டு சதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதற்கு ஒரே வழி, ஒரே தீர்வு – இறுதியான, உறுதியான, நிரந்தர தீர்வு
பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்கள் ஆக்குவதேயாகும் இதன்மூலம் உற்பத்தி அதிகரித்து – ஏற்றுமதி அதிகரிக்கும்
அதன்மூலம் அன்னிய செலவாணி உயர்ந்து- பொருளாதாரம் மேம்ப்படும் அத்துடன் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அதிகரித்து , வாழ்க்கை தரமும் உயரும். இதுவே, அவர்கள் 200 வருடங்களாக நாட்டுக்கு செய்த சேவைக்கும், அர்ப்பணிப்புக்கு கிடைக்கும் கௌரவமாக இருக்கும் என கூறி
விடைபெறுகிறேன் ………………….
நன்றி – வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *