கடற்படையை வெளியேறக் கோரி சிலாவத்துறை மக்கள் போராட்டம்!

மன்னார், சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேறக் கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டம் சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது.

நேற்று மாலை சிலாவத்துறைப் பள்ளிவாசலுக்கு முன் ஒன்று கூடிய மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு சிலாவத்துறைக் கடற்படை முகாம் நோக்கிச் சென்றனர்.

சிலாவத்துறைக் கடற்படை முகாம் வரை சென்ற மக்கள் சிலாவத்துறை கடற்படை அதிகாரியிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். அத்துடன் முசலிப் பிரதேச செயலாளரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மக்கள் சிலாவத்துறைக் கடற்படை முகாமுக்கு முன் அமர்ந்து தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்தப் போராட்டத்தில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக், சர்வ மதத் தலைவர்கள், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணியாளர்கள், அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக முசலிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறைக் கிராமத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு 250 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர்.

போர் நிறைவடைந்து, இடம்பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாகத் தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வந்தனர்.

இந்த மக்கள் முசலியில் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். எனினும் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு கடற்படை முகாமையும் அமைத்துள்ளனர்.

இதனால் அந்தக் காணியை விடுவித்து தருமாறு பல கோரிக்கைகளை விடுத்தபோதும் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில், மக்கள் நேற்று போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *