தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடுகின்றார் வடக்கு ஆளுநர்!

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடக்கு மாகாணத்திலிருந்து 10 ஆயிரம் கையெழுத்துக்களைச் சேகரித்து அரசுக்கு அனுப்பவுள்ளதுடன், ‘ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கு’ என்ற பதாகையைச் சட்டையில் அணிவதுடன் பொதுநாட்களில் கறுப்புச் சட்டை அணிவதற்கும் தாம் தீர்மானித்துள்ளார் என வடக்கு மாகாணஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தோட்டக் கம்பனிகளும் அந்த மக்களின் பிரதிநிதிகளும் நிறைவேற்றவேண்டுமென்றும் வலியுறுத்திய ஆளுநர் இதனை வழங்கக் கம்பனிகள் தயாரில்லை என்றால், அந்தக் கம்பனிகளை மூடிவிட்டு அந்தக் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கவேடும் என்றும் குறிப்பிட்டார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இப்படிக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“150 வருடங்களாக மலையகத் தொழிலாளர்களின் வாழ்வில் தேவையான அளவு மாற்றங்கள் எவையும் உண்டாக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள மற்றைய தமிழ்பேசும் சமூகங்களைக் காட்டிலும் மலையகத் தமிழர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றார்கள். இப்போது அவர்கள் 1000 ரூபாவாக தமது சம்பவத்தை அதிகரிக்கும்படி கேட்கிறார்கள்.

அதனால் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா கிடைக்கும். அந்த 30 ஆயிரம் ரூபா பணத்தில் இப்போது சீவிக்கமுடியுமா? ஆகவே, எந்த நிபந்தனையும் இல்லாமல் சம்பள உயர்வு அந்தமக்களுக்கு வழங்கப்படவேண்டும்.

தமது உழைப்பையும்,உடலையும் தேயிலைத் தோட்டங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த மக்களுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும்.

அவர்களுக்காகப் பொது அமைப்புக்கள்,சமூகஆர்வலர்கள் இணைந்து போராட்டங்களை நடத்தவேண்டும்.

வடக்கு மாகாண மட்டத்தில் நாம் மலையக மக்களுடைய சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவாகச் சுமார் 10 ஆயிரம் கையெழுத்துக்களைப் பெற்று அரசுக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்திருக்கிறோம்.

அதேபோல் ‘1000 ரூபா சம்பள உயர்வை வழங்கு’ என்ற பதாகைகளைச் சட்டையில் அணிவதுடன், பொது நிகழ்வுகளில் கறுப்புச் சட்டை அணிந்து மலையக மக்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்கு நாங்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம்.

அதனைவிடவும் 10 ஆயிரம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கைகளை இன்றே ஆரம்பிப்பதற்குமான நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *