மட்டக்களப்பு மேயருக்கு எதிராக ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்துக்கெதிராக, மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதைக் கண்டித்து, அச்சங்கத்திலுள்ள ஓட்டோ சாரதிகள், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில், பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரால் வழங்கப்பட்ட தரிப்பிட அனுமதியை மீளப் பெற வேண்டும், ஓட்டோ தரிப்பிடங்களில் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் சங்க நிர்வாகத்துடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும், ஓட்டோ சாரதிகளுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது, ஓட்டோக்களின் நாளாந்த வரி பேசித் தீர்க்கப்படல் வேண்டும், சங்கத்தின் அனுசரணையுடன் பதிவுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினர் முன்வைத்தனர்.

தமது சங்கத்தின் மேற்படிக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை, கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோருக்கு வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஜேசுதாசன் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சங்கத்திலுள்ள ஓட்டோ சாரதிகள், தமது ஓட்டோக்களை வீதியோரங்களில் நிறுத்தி விட்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் சமுகமளித்து, இவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகக் கேட்டறிந்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் சுமார் 763 ஓட்டோக்கள் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *