உண்மை கண்டறியப்படவேண்டும்! – ரணிலிடம் கூட்டமைப்பு வலியுறுத்து

இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்துள்ளது என்பதைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டமையை வரவேற்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையைப் பிரதமர் முதன்முறையாகப் பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விடயம். எனவே, உண்மை கண்டறியப்படவேண்டும். பிரதமருக்கு இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அதேவேளை எங்கள் தரப்புக்கும் இதைச் சொல்லிக் கொள்ளவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“தற்போது இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ தெரியவில்லை. அவருக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டதோ அல்லது சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளதால் உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதோ தெரியவில்லை.

போர்க்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்தப் போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும் எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல போரின்போது ஒரு தரப்பினர் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை.

தென்னாபிரிக்காவைபோல உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை நிறுவி உண்மையை சொல்லலாம் என்ற யோசனையைப் பிரதமர் கூறியிருப்பார்.

குற்றமிழைத்தவர்களே முன்வந்து இதை நாங்கள் செய்தோம் என அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்தவேண்டும். தென்னாபிரிக்காவில் நடந்தது அதுதான்.

படையினரும் குற்றமிழைத்திருக்கலாம் என மஹிந்த ராஜபக்‌ஷ சொன்னதையோ கிளிநொச்சியில் பிரதமர் மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னதையோ ஆதரிக்க முடியாது.

இதைப் பிரதமருக்குத் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறோம். உண்மை கண்டறியப்படவேண்டும். பிரதமருக்கு இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அதேவேளை எங்கள் தரப்புக்கும் இதைச் சொல்லிக் கொள்ளவேண்டும்.

எங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்தப் பொறிமுறையில் வெற்றியடையலாம்.

போர் முடிவடைந்த பிறகு சர்வதேச சமூகத்தினரிடையே நாங்கள் நீதி கேட்டுப் போனபோது 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒரு தீர்மானமொன்றை நிறைவேற்றியது. பயங்கரவாதத்தைத் திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக இலங்கை அரசைப் பாராட்டித் தீர்மானத்தை நிறைவேற்றியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

போரின் இறுதிக் கட்டத்திலே யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை விசாரிக்கவேண்டுமெனச் சொல்லி ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர அந்தத் தீர்மானத்தை மாற்றிக் கூடுதலான நாடுகள் சேர்ந்து இலங்கையைப் பாராட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தன. யுத்தம் முடிந்து ஒரு வருட காலத்திலே இடம்பெற்றது அதுதான்.

ஆனால், போர் முடிந்து பத்து வருட காலம் ஆகும்நேரம் இலங்கை நாட்டின் பிரதமரே இலங்கைப் படைகளும் யுத்தக் குற்றங்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதைக் கிளிநொச்சியில் வைத்து ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார். இது எப்படிச் சாத்தியமானது என்பதை நாங்கள் சற்றுப் பின்னோக்கி பார்க்கவேண்டும்.

2010 அம் ஆண்டு முழு உலகமும் சேர்ந்து பயங்கரவாதத்தை திறமையாகக் கையாண்டீர்கள், அதனை முடிவுக்கு கொண்டு வந்தீர்கள் என்று இலங்கை அரசைப் பாராட்டிய பிறகு நான்கு வருடங்களின் பின்னர் அதாவது 2014 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் சர்வதேசக் குற்றங்கள் சம்மந்தமாக ஒரு சர்வதேச விசாரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தால் நடாத்தப்பட வேண்டுமென ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நான்கு வருடத்துக்குள்ளே என்ன நடந்தது.

எந்த மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ அதே மனித உரிமை பேரவையிலே இலங்கைக்குக் கண்டனம் தெரிவித்தும், இந்தக் குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் எனவும் கூறி ஒரு தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா முன்வந்தது. அதன் காரணமாகத் தான் 2012 ஆம் ஆண்டு ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் 2013 ஆம் ஆண்டு திரும்பவும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இரண்டு தடவைகள் நிறைவேற்றியும் இலங்கை அரசு விசாரணைகள் எதுவும் செய்யாத காரணத்தினாலே தான் 2014 ஆம்ஆண்டு காலத்திலே சர்வவதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டது. முழுமையான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி அந்த அறிக்கை வெளிவந்தது. அதற்கு முன்னதாக 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு நிபுணர்கள் குழு அறிக்கை வெளிவந்திருந்தது.

இந்த இரண்டு அறிக்கைகளிலேயும் சில விடயங்கள் தெட்டத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு அறிக்கையையம் நாங்கள் மேற்கோள் காட்டுவதற்கான காரணம் என்னவென்றால், போரில் ஈடுபடாத தரப்புக்கள் சுயாதீனமான தரப்புக்கள் சர்வதேசத் தரப்பு இது சம்பந்தமாக ஆய்வு செய்திருக்கிறார்கள். ஒரு விசாரணையை நடத்தியிருக்கிறார்கள். இது அவர்களுடைய அறிக்கை. சுயாதீனமாகச் சொல்லப்பட்ட அறிக்கை என்ற காரணத்தினாலே நாங்கள் அதனை மேற்கோள் காட்டுகிறோம். அதனை முன்வைத்து முழுமையான நீதிமன்றப் பொறிமுறையில் செய்யப்படவேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

அந்த அறிக்கையிலே என்ன சொல்லப்பட்டிருக்கின்றதென்பது மிகவும் முக்கியமானது. இளைஞர்கள் இதனைத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஒரு மந்திரமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றவர்களுக்கு அந்த அறிக்கையில் என்ன இருக்கிறதென்று தெரியாது. ஆனால், அந்த அறிக்கையை மேற்கோள் காட்டுவார்கள்.

யஸ்மின் சூக்காவின் அறிக்கை இருக்கிறதென்று சொல்லுவார்கள். ஓ.எஸ்.எல். ரிப்போட் இருக்கிறதென்றும் சொல்லுவார்கள். அதில் நாங்களே மேற்கோள் காட்டும் இந்த அறிக்கையிலே இலங்கை இராணுவம், இலங்கை அரசு சர்வதேச குற்றங்களை இழைத்தார்கள் என்பதற்குத் தேவைக்கு அதிகமான சாட்சியங்கள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால், அதனை மட்டும் அந்த அறிக்கையில் சொல்லவில்லை.

போரிலே ஈடுபட்ட மற்றத் தரப்பான தமிழீழ விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்கள் இழைத்தார்கள் என்பதற்கு முழுமையான சாட்சியங்கள் இருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அது இரண்டு அறிக்கைகளிலும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைகளைத்தான் நாங்கள் முன்மாதிரியாக வைத்து மேற்கோள் காட்டி ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையைக் கேட்டு நிற்கின்றோம். இது தமிழ்த் தரப்புக்கு முற்றுமாகத் தெரிய வேண்டிய ஒரு உண்மை.

தமிழ் இளைஞர்களிடத்திலே பேசுகின்ற பலர் பாதி உண்மையைத்தான் சொல்லுவார்கள். அரைவாசியைத்தான் சொல்வார்கள். ஊடகங்கள் இன்னமும் மோசம். அவர்களும் அரைவாசியைத்தான் சொல்வார்கள். இன்றைக்கு நான் இங்கு சொல்வதில் அரைவாசியைத்தான் நாளை சொல்வார்கள். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் இழைத்தார்கள் என்று சுமந்திரன் சொன்னார் என்பதை மட்டும்தான் இந்த ஊடகங்கள் எல்லாம் நாளை போடுவார்கள்.

ஆனால், முழு உண்மையையும் நாங்கள் அறிந்து கொண்டிருக்க வேண்டும். முழு உண்மையும் எங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *