ஐ.நா. சபை கட்டமைப்பு! – அங்கத்துவ நாடுகள் மட்டுமே சர்வதேச நீதிமன்றில் முறையிட முடியும்

– பஸ்றி ஸீ. ஹனியா
சட்டத்துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்.

க்கிய நாடுகள் சபையானது தன்னுள் பிரதான ஆறு உறுப்புக்களைக் கொண்டுள்ளது. பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார – சமூக நலச் சபை, நம்பிக்கைப் பொறுப்புச் சபை, சர்வதேச நீதிமன்றம், செயலகம் என்பனவே அவையாகும். அந்த உறுப்புகளுக்கெனப் பல பணிகளும் அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு உறுப்புகளையும் ஆழமாக நோக்கினால்,

பொதுச் சபை (General Assembly)

பொதுச் சபை என்பது அனைத்து அங்கத்துவ நாடுகளுக்குமான ஒரு பொது அரங்கம் ஆகும். சகல அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தச் சபையில் இடம்பெறுவர். இங்கு இருக்கின்ற ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வாக்கு உண்டு. சமாதானமும் பாதுகாப்பும், புதிய அங்கத்தவர்களைச் சேர்த்தல், வரவு – செலவுத் திட்டங்களைப் பார்த்தல் போன்ற முக்கிய விடயங்களில் மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மை வாக்குகளின் மூலமே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

ஐ.நா. சபை சாசனத்தின்படி பணிகளும் அதிகாரங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அவையாவன:-

* ஐக்கிய நாடுகளின் வரவு – செலவுத் திட்டத்தைப் பரிசோதித்து அங்கீகாரம் அளித்தல். ஒவ்வொரு நாடும் எவ்வளவு நிதிப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.

* நாடுகளுக்கிடையிலான நட்புகளைப் பாதிக்கக்கூடிய ஏதேனும் பிரச்சினைகள் தோன்றும்போது அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அமைதி வாயிலான சிபாரிசுகளை முன்வைத்தல்.

* சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்காக ஆயுதப்பரிகரணம் மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான கோட்பாடுகளை ஆராய்ந்து சிபாரிசு செய்தல்.

* பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது சர்வதேச சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் விடயங்கள் பற்றி பரிசீலனை செய்து சிபாரிசுகளைச் சமர்ப்பித்தல்.

* சாசனத்தின் வரம்புக்குட்பட்ட ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து சிபாரிசு செய்தல்.

* சர்வதேச அரசியல் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச சட்டத்தை விருத்தி செய்து கோவைப்படுத்துவதற்கும் சகலருக்கும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் பொருளாதார, சமூக, கலாசார, கல்வி, சுகாதாரத் துறைகளில் சர்வதேச சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசுகளைச் சமர்ப்பித்தல்.

* பாதுகாப்புச் சபையிடமிருந்தும் ஏனைய ஐ.நா. உறுப்பு நாடுகளிடமிருந்தும் அறிக்கைகளைப் பெற்றுப் பரிசீலனை செய்தல்.

* பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் பொருளாதார – சமூக நலச் சபையின் உறுப்பினர்களையும் நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கான தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் தெரிவு செய்தல்.

* பாதுகாப்புச் சபையுடன் இணைந்து சர்வதேச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளைத் தெரிவுசெய்தல்.

* பாதுகாப்புச் சபையின் சிபாரிசுகளுக்கு அமைய செயலாளர் நாயகத்தை நியமித்தல்.

பாதுகாப்புச் சபை (Security Council)

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுகின்ற பிரதான பொறுப்பு பாதுகாப்புச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சபையில் சுமார் 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவற்றுள் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய 5 நாடுகளும் வீட்டோ பவர் கொண்ட நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். ஏனைய 10 அங்கத்துவ நாடுகளும் இரண்டு வருடகாலப் பதவிக்கெனப் பொதுச்சபையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஒவ்வோர் அங்கத்துவ நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. நடைமுறை விடயங்களில் குறைந்தபட்சம் ஒன்பது நாடுகளின் சாதகமான வாக்குகளுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால், முக்கிய விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு 5 நிரந்தர அங்கத்துவ நாடுகள் அடங்கலாக ஒன்பது நாடுகளின் வாக்குகள் அவசியமாகும் .

இங்குதான் ஐந்து நிரந்தர அங்கத்துவம் கொண்ட நாடுகளின் வீட்டோ அதிகாரத்தை அவதானிக்க முடிகின்றது. வல்லரசுகளின் ஏகோபித்த நிலைப்பாடு இல்லாமல் எந்தவொரு முக்கியமான தீர்மானங்களையும் எடுக்க முடியாது.

நாடுகள் சமமாக மதிக்கப்படும், சம உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற கூற்றுகளை ஐ.நா. தன்னகத்தே கொண்டிருந்த போதிலும் வீட்டோ  அதிகாரம் வழங்கப்பட்ட நாடுகளைத் தலையில் மேலே வைத்துக்கொண்டுதான் இவ்வளவு விடயங்களையும் பேசிக் கொண்டிருக்கின்றது என்பது விமர்சனத்துக்குரியதே.

பாதுகாப்புச் சபையின் அதிகாரங்களையும் பணிகளையும் எடுத்து நோக்கினால்,

* செயலாளர் நாயகத்தின் நியமனத்தைப் பொதுச் சபைக்குச் சிபாரிசு செய்தல்.

* பொதுச் சபையுடன் இணைந்து சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல்.

* போர் நடக்கும் பிரதேசங்களில் ஐக்கிய நாடுகளின் நம்பிக்கைப் பொறுப்புக் கடமைகளை நிறைவேற்றுதல்.

* புதிய அங்கத்தவர்களைச் சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்தல்.

* அவசியமான இடங்களில் இராணுவ நடவடிக்கைகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக எடுத்தல்.

* ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு – நிறுத்துவதற்குப் பொருளாதாரத் தடை போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி அங்கத்துவ நாடுகளுக்குச் சிபாரிசு செய்தல்.

* ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு முறையை ஏற்படுத்தித் திட்டங்களை வகுத்தல்.

* சர்வதேச நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளை விசாரித்தல்.

* ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கமைய சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல்.

பொருளாதார சமூக நலச்சபை (Economic and social council)

ஐக்கிய நாடுகளின் அனைத்துப் பணிகளையும், நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் பிரதான உறுப்பாண்மையாகவே பொருளாதார சமூக நலச் சபை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சபையில் 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

பணிகளும் அதிகாரங்களும்

* மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் என்பன வழங்கப்படுவதையும் அவற்றுக்கு மரியாதை அளிக்கப்படுவதையும் ஊக்குவித்தல்.

* சர்வதேச பொருளாதார சமூகப் பிரச்சினைகளையிட்டு ஆராய்வதற்கும் அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்புக்களுக்குச் சிபாரிசு செய்யப்படும் கொள்கைகளை வகுப்பதற்கும் ஒரு மத்திய அரங்கமாகச் செயற்படுதல்.

* சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார, கல்வி, சுகாதார மற்றும் தொடர்புடைய விடயங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அல்லது ஊக்குவித்து அறிக்கைகளையும் சிபாரிசுகளையும் சமர்ப்பித்தல்.

* பொருளாதார, சமூக மற்றும் தொடர்புடைய துறைகளில் முக்கியமான சர்வதேச மாநாடுகள் ஏற்பாடு செய்வதற்கு உதவுதலும் இத்தகைய மாநாடுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தலும்.

நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trusteeship council)

நம்பிக்கைப் பொறுப்புச் சபையானது 1945ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 7 நாடுகளின் நிர்வாகத்தில் விடப்பட்ட 11 நம்பிக்கைப் பொறுப்புப் பிரதேசங்கள் தொடர்பாக சர்வதேச மேற்பார்வை வழங்கவதும் இப்பிரதேசங்களின் சுயாட்சிக்கு அல்லது சுதந்திரத்துக்குரிய ஆயுதங்கள் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.

1994ஆம் ஆண்டளவில் சகல நம்பிக்கைப் பொறுப்புப் பிரதேசங்களுமே தனிநாடாக அல்லது அயலிலுள்ள சுதந்திர நாடுகளுடன் இணைவதன் மூலம் சுயாட்சியை அல்லது சுதந்திரத்தைப் பெற்றுவிட்டன. நம்பிக்கைப் பொறுப்புச் சபையானது அதனிடம் ஒப்படைக்கப்பட்ட பணி பூர்த்தியடைந்துவிட்டதால் நடைமுறை விதிகளை மாற்றிக்கொண்டுள்ளது. இனிமேல் தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில்தான் இந்தச் சபை கூடும்.

சர்வதேச நீதிமன்றம் (International court of justice)

நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகளின் பிரதான நீதிச் சேவை ஆகும். நாடுகளுக்கிடையிலான சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காகவுமே இது அமைக்கப்பட்டுள்ளது. அங்கத்துவ நாடுகள் மட்டுமே இந்த நீதிமன்றத்திடம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கவும் வழக்காடவும் முடியும். தனிப்பட்ட நபர்கள், குழுக்கள் அல்லது சர்வதேச அமைப்புக்கள் இந்த நீதிமன்றத்திடம் நியாயம் கோர முடியாது. 

 
பொதுச் சபையாலும் பாதுகாப்புச் சபையாலும் தனித்தனி வாக்களிப்பு மூலம் தெரிவுசெய்யப்படும் 15 நீதிபதிகள் சர்வதேச நீதிமன்றத்தில் இடம்பெறுவர். தகைமைகளின் அடிப்படையிலேயே அவர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

செயலகம் (Secretariat)

உலகெங்குமுள்ள பல்வேறு இடங்களில் ஐ.நாவின் பலதரப்பட்ட அன்றாடப் பணிகளை ஆற்றும் சர்வதேச அலுவலர்களை உள்ளடக்கிய அமைப்பே செயலகமாகும். ஐ.நாவின் ஏனைய பிரதான உறுப்பாண்மைகளுக்கான சேவைகளை வழங்குவதும் அவற்றால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் என்பவற்றை நிர்வகிப்பதும் செயலகமே ஆகும்.

செயலகத்தின் தலைவராக விளங்கும் செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபாரிசுக்கமையப் பொதுச்சபையால் ஐந்து வருட பதவிக்காலத்துக்கு நியமிக்கப்படுகின்றார். அவரது பதவிக்காலம் புதுப்பிக்கப்படலாம்.

தற்போதைய ஐ.நா. சபையின் செயலாளர் நாயகமாக போர்த்துக்கலின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெரெஸ் பதவி வகிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *