விடயம் விளங்காமல் அரசை காப்பாற்ற முயல்கிறார் விக்கி! – சுமந்திரன் காட்டம்

சர்வதேச நீதிப் பொறிமுறையில் இருந்து
தப்புவதற்கு வழி எடுத்துக் கொடுக்கிறார்

முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் சர்வதேச நீதிப் பொறிமுறை விவகாரம் தொடர்பில் விடயம் விளங்காமல் அறிக்கைகளை வெளியிட்டு, தெரிந்தோ, தெரியாமலோ இலங்கை அரசைக் காப்பாற்ற முயல்கின்றார் எனக் குறிப்பிட்டு அந்தப் போக்கை காட்டத்துடன் கண்டித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

நீதியரசர் பகவதி தலைமையிலான சுயாதீனக் குழுவை உதாரணமாகக் கொண்டு கலப்பு நீதிமன்றம் நிறுவலாம் என்ற முன்னாள் முதல்வரின் யோசனையையே சிறுபிள்ளைத்தனமான கூற்று; இலங்கை அரசைக் காப்பாற்றப் 06பண்ணும் வேலை என்று விமர்ச்சித்திருக்கின்றார் சுமந்திரன் எம்.பி.

‘பதினாறு மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட உடலகம ஆணைக் குழுவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு முன்னணி நபர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழுவான பகவதி குழுவை உதாரணமாகக் கொண்டு கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க முடியும்’ – என்று நீதியரசர் விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் வெளியிட்ட கருத்தையே இப்போது கடுமையாகச் சாடியிருக்கின்றார் சுமந்திரன் எம்.பி.

இவ்வளவு காலமும் தூக்கத்தில் இருந்தவர் திடீரென எழுந்து, இதுவரை நடந்தவை பற்றி அறியாமல், கருத்து வெளியிடுகின்ற மாதிரி இப்போது நீதியரசர் விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிடுகின்றார் என்று சாடுகின்றார் சுமந்திரன் எம்.பி.

இவ்விடயம் குறித்து ‘காலைக்கதிர்’ பத்திரிகையிடம் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:-

“பதினாறு மோசமான உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட உடலகம ஆணைக்குழுவின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட முன்னணிப் பிரமுகர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழு (IIGEP) குறித்து நீதியரசர் விக்னேஸ்வரன் பிரஸ்தாபித்துள்ளார்.

இந்தக் குழுவுக்கு இந்தியாவின் புகழ்பெற்ற நீதியரசர் பி.என்.பகவதி தலைவர். பிற்காலத்தில் பிரான்ஸ் பிரதமரான பேர்னாட் குச்னர் ஐரோப்பிய ஆணைக் குழுவினால் நியமிக்கப்பட்டார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையைப் பின்னர் வெளியிட்ட மர்சூகி தருஸ் மன் சர்வதேச நாடாளுமன்ற அமைப்பினால் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட பத்துப்பேர் குழு ஒரு விசாரணைக் கட்டமைப்பு அல்ல. வெறுமனே இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு விசாரணையை பார்வையாளராகக் கண்காணிக்கும் ஓர் அவதானிகள் குழு மட்டுமே.

அதுவும், கூட இலங்கையில் நடைபெற்ற உடலகம ஆணைக் குழுவின் விசாரணைப் பொறிமுறையை அவதானித்து விட்டு இது சரிபட்டு வராது என்று பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு நாட்டை விட்டு வெளியேறும் கதிதான் அதற்கு ஏற்பட்டது.

உண்மைகளைத் தேடிக் கண்டறியும் அரசியல் பற்றுறுதி இலங்கை அரசுக்குக் கிடையாது, வழக்குத் தொடுநரான சட்டமா அதிபர் அரசின் நலனைக் கவனிக்கும் தரப்பு என்பதால் அத்தரப்பின் நலன் நோக்கமும் ஈடுபாடும் எதிரெதிர் முரண்பாட்டு நிலைப்பாட்டைக் கொண்டவை, பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறை கிடையாது, விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் காலக்கட்டுப்பாடு இல்லை, விசாரணைகளுக்கு அரசுக் கட்டமைப்புகளின் முழு ஒத்துழைப்புக் கிடை யாது, சர்வதேச தரத்தில் விசாரணைகளை நடத்தும் திடசங்கற்பம் இலங்கை அரசுக்கு இல்லை – என்பன போன்ற சில காரணங்களை முன்வைத்து, அவற்றை அறிவித்து விட்டு வெளியேறும் வெறும் கண்காணிப்பு அமைப்பாக மட்டுமே அக்குழு இருந்தது.

ஆனால், 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 30/01 தீர்மானம் மூலம் இலங்கையும் சேர்ந்து ஒப்புக்கொண்ட கலப்பு நீதிப் பொறிமுறை அத்தகையது அல்ல. ஆனால், அத்தகைய கண்காணிப்புப் பொறிமுறைதான் அது என்று கூறி, அப்படி ஒன்றை நியமித்துத் தப்புவதற்கே ஜனாதிபதி, பிரதமரிலிருந்து ஸ்ரீலங்கா அரசுத் தரப்பு முழுவதும் முயன்று கொண்டிருக்கின்றன.

அதற்கு ஆதரவு தெரிவிக்குமாற்போல நீதியரசர் விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது; விவேகமற்ற, முட்டாள்தான போக்கும் கூட.

சர்வதேச ரீதியிலான நீதிபதிகள், எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள், அதிகாரமளிக்கப்பட்ட வழக்குத் தொடுநர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகிய நான்கு தரப்பினரின் பங்களிப்புடன் இந்த நீதி விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பதே 30/01 தீர்மானத்தின் வாசகமாகும்.

அப்படியானால், அவர்களை பார்வையாளர்களாக – கண்காணிப்பாளர்களாக நியமித்து உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நடத்துவோம் என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அதை நான் அப்போதே நாடாளுமன்றத்தில் எதிர்த்தேன். சர்வதேச ரீதியில் நீதிபதிகளின் பங்களிப்பு என்பதும், எதிர்த்தரப்பின் சட்டத்தரணிகளின் பங்களிப்பு என்பதும், உத்தியோகபூர்வ வழக்குத் தொடுநரின் பங்களிப்பு என்பதும், புலனாய்வாளர்களின் பங்களிப்பு என்பதும் கண்காணிப்பு அல்ல. அந்தந்தப் பதவி நிலைகளில் அவர்கள் விசாரணைகளில் பங்களிக்க வேண்டும். விசாரணை நடத்தும் நீதிபதிகள் குழுவில் சர்வதேச நீதிபதிகள் இருக்க வேண்டும். எதிரித்தரப்பின் சட்டத்தரணிகளாக சர்வதேச சட்டத்தரணிகள் முன்னிலையாகக் கூடியதாக இருக்க வேண்டும். உத்தியோகபூர்வ வழக்குத் தொடுநர்களாகவும் சர்வதேசப் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். புலனாய்வாளர்களிலும் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

அந்தந்த நான்கு பொறுப்புகளிலும் சர்வதேசத் தரப்பில் உள்ளோர் பங்குபற்ற வேண்டும் என்பதே அந்தத் தீர்மானத்தின் ஒரே விளக்கம் என்று தெரிவித்து அதற்காகவே நாம் விட்டுக் கொடுக்காமல் போராடி வருகின்றோம். அதையே விடாது வலியுறுத்தி நிற்கின்றோம்.

இப்போது, நீரியரசர் விக்னேஸ்வரன் என்னவென்றால், தம்பாட்டில் பகவதி ஆணைக்குழு போன்ற ஒரு கண்காணிப்புக் குழுவுக்குப் பரிந்துரைத்து, கலப்பு நீதிப் பொறிமுறையிலிருந்து இலங்கை அரசு தப்பிச் செல்வதற்கு வழிகாட்டுகின்றார். இத்தகைய அறிவிப்பு விவேகமற்றது; சிறுபிள்ளைத்தனமானது. தமிழர் தரப்பை அடியோடு கைவிடச் செய்யும் முட்டாள்தனமான வழிகாட்டலைக் கொண்டது” – என்று சுமந்திரன் எம்.பி. தமது உள்ளக்கிடக்கைக் கொட்டித் தீர்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *