தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.நகரில் களியாட்டங்கள் தடை! – மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம்

தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேளிக்கை விழாக்களை நடத்துவதைத் தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் சபையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

“யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்தல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேளிக்கை விழாக்களை நடத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

குறிப்பாக தமிழ் இன அழிப்பு நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தியாக தீபன் திலீபனின் ஆரம்ப இறுதி நாள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தில் இவ்வாறான களியாட்ட, கேளிக்கை நிகழ்வுகளைத் தடை செய்ய வேண்டும்.

அவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுவதற்கு மாநகர சபை அனுமதி வழங்கக்கூடாது.

மேலும் சபை எல்லைக்குள் நடைபெறும் நிகழ்வுகளில் சமூகப் பிறழ்வான சூது நடவடிக்கைகளையும் தடை செய்ய வேண்டும்.”

– என்று பார்த்தீபன் சபையில் சமர்ப் பித்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் மதுபானப் போத்தல்களை வெற்றி இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வையும் பார்த்தீபன் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. இதன்போது ஈ.பி.டி.பியின் உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு.ரெமிடியஸ் பிரேரணையில் முதல் போராளியான சிவகுமாரன் உயிரிநீத்த ஜூன் 5ஆம் திகதியிலும் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகள் நடத்துவதற்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரினார்.

மாவீரர் வாரம் முழுவதிலும் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், நவம்பர் 26, 27ஆம் திகதிகளில் கேளிக்கை நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கலாம் என்று திருத்தத்தை முன்வைத்தார்.

அவற்றை உள்ளடக்கிச் சபையில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *