பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் பாண் தயாரிக்கும் இலங்கை இளைஞர் வருகிறார்!

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் இன்றைய தினம் (28.07.2023) இலங்கை வருகின்றார்.

பிரான்ஸில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையின் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா வென்றிருந்தார்.

“La meilleure baguette de Paris”என்பது இந்த போட்டியின் பெயராகும். இது தமிழில் ‘பாரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.

30 ஆவது முறையாக இடம்பெறும் இந்த போட்டியில், இந்தமுறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம் மிக்க baguette போட்டிக்கு பாணைத் தயாரித்து அனுப்பியிருந்தனர்.

இதில் தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து,முதலிடத்தைப் பிடித்திருந்ததுடன் வெற்றி பரிசாக 4000 யூரோவை பணப்பரிசாகவும் பெற்றிருந்தார்.

அத்துடன் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்னின் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியது.

2009ஆம் ஆண்டு முதல் அவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்தநிலையில் இன்றைய தினம் (28) இலங்கை வரும் அவர் அரச மட்டத்திலான அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணின் உற்பத்தி மற்றும் அதன் தனித்துவம் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அது சார்ந்த கல்வி நிலையங்களை உருவாக்குவதே தமது இலக்காகும் என தர்ஷன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *