சந்தாவில் கைவைக்கமாட்டோம் – தொண்டமான் அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு சந்தா கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இ.தொ.காவின் செய்தியாளர் மாநாடு இன்று பகல் கொள்ளுபிட்டியவிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

கேள்வி – பதில் நேரத்தின்போது, தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கத்துக்கான சந்தா கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” இப்போது இல்லையென நீங்கள் கூறுவது, இரண்டு வருடங்களுக்கும் பொருந்துமா” என எழுப்பட்ட கேள்விக்கு,

” எப்படிதான் கேட்டாலும் நான் சிக்கமாட்டேன். இப்போதைக்கு அதிகரிக்கும் எண்ணம் இல்லை.” என்றார் ஆறுமுகன் தொண்டமான்.

அதேவேளை, வரலாற்றில் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கான நிலுவை சம்பளமும் வழங்கப்படவுள்ளது.

தோட்டப்பகுதிகளில் உள்ளாட்சிசபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். வேலை நாட்களில் அவர்கள் சபை அமர்வில் கலந்துகொண்டால் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும்.

அதேபோல் குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதல் உட்பட மேலும் சில அனர்த்தங்களுக்குள்ளாகும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் சிகிச்சைபெறும் காலப்பகுதியில் சம்பள வெட்டு இடம்பெறாது. மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்தகாலத்தில் 500 ரூபாவே அடிப்படை சம்பளமாக இருந்தது. இனிவரும் காலப்பகுதியில் வேலைக்குசென்றால் ஒருநாளைக்கு 750 ரூபா உறுதி. மேலதிகமாக கொழுந்து எடுத்தால் அதன் ஊடாகவும் வருமானம் பெறலாம்.

எம்மால் முடிந்தளவு சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்துவிட்டோம். இதைவிடவும் அதிகம் பெற்றுக்கொடுக்க முடியுமென்றால் அதை முன்வந்து செய்யுங்கள். முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

கூட்டுஒப்பந்தத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து தோட்ட தலைவர்களுக்கம் வழங்கப்படும்.” என்றும் ஆறுமுகன் எம்.பி. கூறினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *