ஞானசாரருக்கு மன்னிப்பளித்து மீண்டும் மைத்திரி தவறிழைப்பு! – அரசமைப்பை மீறும் செயற்பாடு என தமிழ்க் கூட்டமைப்பு கடும் கண்டனம்

நீதிமன்றத்தை அவமதித்துச் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

எல்லாக் கடும்போக்கான சிந்தனையாளர்களையும் சமமான அளவில் நடத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கும் இந்நிலையில், பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின் அதி மென்போக்கானது நாட்டுக்குத் தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“அரசமைப்பில் அரச தலைவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வண.ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டனம் செய்கின்றது.

ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தை அலட்சியம் செய்த குற்றத்துக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அவர் சிறையிலிடப்பட்டார்.

கற்றறிந்த நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து, வண. ஞானசார தேரர் தன்னை நியாயப்படுத்துவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட விசாரணையொன்றின் பின்பே இந்தத் தண்டனையும் தீர்ப்பும் நிறைவேறியது.

உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது.

இந்நாட்டின் பௌத்தர் அல்லாத குடிமக்கள் மீதான வன்முறையைத் தூண்டிவிடும் இந்தத் தேரரின் நடவடிக்கைகள் மீது ஒருபோதும் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திராத நிலையில், இந்தச் சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் சட்டத்துக்குட்படுத்தப்பட்டுக் கையாளப்பட்டார்.

எல்லாக் குடிமக்களும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால் இனவெறி மற்றும் மதவெறியைக் கட்டுப்படுத்தி வைப்பதாகும்.

அரசானது இந்தச் சவாலை கருத்தில்கொண்டு எந்த இனத்தவர் அல்லது மதத்தவராய் இருப்பினும், எல்லா கடும் போக்காளர்களையும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

எல்லாக் கடும் போக்கான சிந்தனையாளர்களையும் சமமான அளவில் நடத்தவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கும் இந்நிலையில், பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின் அதி மென்போக்கானது நாட்டுக்குத் தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது.

அச்செய்தி யாதெனில், எண்ணிக்கையில் குறைவானவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவது ஏற்றுக்கொள்ளப்பட கூடியது, ஆனால், எண்ணிக்கையில் அதிகமானவர்களுக்கு அசௌகரியம் அளிக்கும் தீங்கற்ற செயல்கள் மிகக் கடுமையாக நோக்கப்படும் என்பதாகும். இது பெரும்பான்மைவாதத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாகும்.

ஜனாதிபதியின் இந்நடவடிக்கையைக் கண்டனம் செய்து இந்த ஆபத்தான வழக்கத்தை எதிர்மாறாக மாற்றுவதற்கு நேர் வழி சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *