வலிகாமம் வடக்கில் 39 ஏக்கர் இராணுவத்தினரால் விடுவிப்பு! – மீண்டுவந்த வீடொன்றின் சுவரில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்

யாழ். வலிகாமம் வடக்கில் 39 ஏக்கர் காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டன. தையிட்டி தெற்கில் 19 ஏக்கர் காணியும், ஒட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன.

விடுவிக்கப்பட்ட காணியில் உள்ள வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் அதன் சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்றுப் படங்களைப் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கியுள்ளனர்.

இந்தக் காணிகள் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டபோதும் நேற்றுக் காலையே காணி உரிமையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

இதன்படி நேற்றுமுன்தினம் வலி.வடக்கில் ஜே/249 தையிட்டி வடக்கு, ஜே/250 தையிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் 19 ஏக்கர் காணி விடுவிப்புக்கான சான்றிதழை காங்கேசன்துறை இராணுவப் பொறுப்பதிகாரி வலி.வடக்குப் பிரதேச செயலரிடம் கையளித்தார்.

இருப்பினும் ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணிக்கான சான்றிதழ்கள் பிரதேச செயலரிடம் இராணுவ தரப்பால் கையளிக்கப்படவில்லை.

இருந்தபோதும் ஒட்டகப்புலப் பகுதிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.

தையிட்டி தெற்கில் ஜே/ 249, ஜே/250 இல் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அநேகமான வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியமையால் நல்ல நிலையிலேயே உள்ளன.

சில வீடுகளைப் படையினர் திருத்தி மாற்றியுள்ளனர். அத்துடன் வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் அதன் சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்றுப் படங்களைப் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கியுள்ளனர்.

காணியில் வளர்ந்த அரச மரத்தில் புத்தர் சிலை வைத்து வணங்கியுள்ளனர். எனினும், புத்தரை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *