சேனா படைப்புழுவின் தாக்கம் வடக்கிலும் வேகமாகப் பரவல்!

சோளப் பயிர்ச்செய்கைகளில் வேகமாகப் பரவிவரும் படைப் புழுவின் தாக்கம் தற்போது வடக்கு மாகாணத்திலும் பரவி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக படைப்புழுவின் தாக்கம் தொடர்பில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவின் கொக்கிளாய், குமுழமுனை மற்றும் கொக்குத்தொடுவாய் போன்ற பகுதியில் சோளப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அந்தப் பகுதிகளில் உள்ள சோளப் பயிர்ச்செய்கையிலேயே படைப்புழு தாக்கம் செலுத்தியுள்ளது.

அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தின் பளை, செல்வபுரம் போன்ற பகுதிகளிலும் படைப்புழுவின் தாக்கம் பரவியுள்ளது.

இதேவேளை, சேனா படைப்புழுவை ஒழிப்பதற்குச் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார்.

படைப்புழுவை ஒழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பி ஹரிசன் குறிப்பிட்டார். இதற்கான நிதியை விரைவில் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, மேலதிகப் பரிசோதனைகளுக்காகப் படைப்புழுவின் மாதிரியை அமெரிக்கப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் சோளம் உள்ளிட்ட சில துணைப் பயிர்ச்செய்கையைப் படைப்புழுக்கள் அதிகளவில் தாக்கியுள்ளன. சுமார் நூறு வகையான பயிர்ச்செய்கையை படைப்புழு தாக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, படைப்புழுவை ஒழிப்பதற்குத் தேவையேற்படும் பட்சத்தில் இராணுவத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக புத்தசாசன மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *