ஒலுவில் துறைமுகத்தில் இருவேறு ஆர்ப்பாட்டங்களினால் பதற்றம்!

ஒலுவில் துறைமுகம் முன்பாக இரு வேறுபட்ட பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. எனினும், அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

படகு நுளைவாயலில் மூடியுள்ள மணலை அகற்றுமாறு கோரி மீனவர்கள் துறைமுக நுளைவாயல் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட அதேவேளை, கடலரிப்புக்கு நிரந்தத் தீா்வை வழங்கியதன் பின்னரே, மணலை அகற்ற வேண்டுமெனக் கோரிக்​கை விடுத்து, ஒலுவில் பொதுமக்கள் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

அம்பாறை மாவட்ட அனைத்து மீனவர் அமைப்புகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவத் தொழிலார்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்புக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திய பின்னரே, குறித்த துறைமுகத்தில் மணலை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தற்போது மணலை அகற்றுவதற்கான நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்து ஒலுவில் பிரதேசமக்கள் துறைமுக பிரதான நுளைவாயல் முன்பாக மீனவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

அத்துடன், துறைமுக நுளைவாயல் கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டுள்ளதால் நாம் மேற்கொண்டு வந்த கடற்தொழில் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கக்கான மீனவர்களின் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீனவர்களினதும், அவர்களினது குடும்பங்களினதும் நலன் கருதி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு, தமக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு, பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஒலுவில் துறைமுகத்தில் மணல் குவிந்துள்ளதனால் கடந்த ஒரு வருடகாலமாக கடற்தொழில் ஈடுபட்டு வரும் கல்முனை, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 800 மீனவர்கள் பெரும் கஷ்டங்களையும், இன்னல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

 (எஸ்.அஷ்ரப்கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *