நன்றாக இருந்த வீடுகளை இடித்தழித்த இராணுவம்! – அங்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றம்

யாழ். வலிகாமம் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிடச் சென்ற மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அங்குள்ள காணிகள் பற்றைக் காடுகளாகக் காணப்பட்டன.

உருப்படியாக இருந்த வீடுகள் பல அண்மையில் இடித்தழிக்கப்பட்டும் காணப்பட்டன.

அத்துடன் பல வீடுகளின் கதவு. ஐன்னல்கள், கூரைகள் பிடுங்கி எடுக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டதைப் பார்த்த மக்கள் கவலை வெளியிட்டனர்.

வலிகாமமல் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் கடந்த பல வருடங்களாக இருந்த தையிட்டி வடக்கு மற்றும் தெற்கு மற்றும் ஒட்டகப்புலம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக 45 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இவ்வாறு விடுக்கப்பட்ட காணிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய தமது காணிகளைப் பார்வையிட்ட மக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“நீண்ட காலத்தின் பின்னர் நாங்கள் எங்கள் காணிகளுக்கு வந்துளோம். எங்கள் காணிகளைப் பார்வையிடுவதற்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்திருந்த எமக்கு இங்கு பார்த்தபோது ஏமாற்றமாகவும் கவலையாகவும் உள்ளது. அதேநேரம் எங்கள் காணிகள் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியாகவும் உள்ளது.

தற்போது எங்கள் காணிகளில் பலரதும் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. சிலரது வீடுகள் இருக்கின்றன.

அதேநேரம் பல வீடுகளின் கதவு, ஜன்னல், கூரைகள் பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தக் காணிகள் விடுவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னரே எங்கள் வீடுகள் பலவும் சேதமாக்கப்பட்டுள்ளன” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *