ரூ. 1000 இற்காக தொழிலாளர்கள் திண்டாட்டம் ! ஜனாதிபதியை நாளை அவசரமாக சந்திக்கிறார் தொண்டா!!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக்கோரி தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கான அறைகூவல் அவசரப்பட்டு விடுக்கப்பட்டதல்ல. இலக்கை அடைவதற்காக திட்டமிட்ட அடிப்படையிலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  ஆயிரம் என்ற கோரிக்கையிலிருந்து இதொகா ஒருபோதும் பின்வாங்காது. 600 ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், மேலதிக கொடுப்பனவுகள் இணைத்ததாக 925 ரூபாவை வழங்க தயார் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்தது. இதற்கு நாம் உடன்படவில்லை. ஆயிரம் ரூபாவே தேவையென திட்டவட்டமாக அறிவித்தோம். அக்கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலும், கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலுமே போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த 6 நாட்களாக எவ்வித பிரச்சினையுமின்றி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்.அதேநேரத்தில் கடந்த முறை ஒன்றரை வருடங்களாக அதவாது 18 மாதங்கள் பேச்சுவாரத்தை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதன் போது வழங்கப்பட வேண்டிய நிலுவை பணம் அதிகம் என்பதனால் இதனை வழங்க மறுத்தனர். இதற்கு வேறு காரணங்களும் இருந்தன.

ஒக்டோபர் 26 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், அரசியல் குழப்பம் ஏற்பட்டதால் அது ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதியுடன் இவ்விவகாரம் தொடர்பில் நாளை (10) கொழும்பில் பேச்சு நடத்தப்படும். சம்பள விவகாரத்தில் தலையிடுமாறு ஜனாதிபதியிடம் கோரவுள்ளோம்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *