அரசியல் கைதிகள் விடுதலை முறைமை அடுத்த வாரத்தில் முடிவாகும்! – கூட்டமைப்பிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

பிரதமர், சட்டமா அதிபர், தேவையான அனைவரையும் அழைத்து அரசியல் கைதிகள் விடயத்தைச் சாதகமாக அணுகி அவர்களது விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பது அடுத்த வாரம் முடிவு செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது எனக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பு இன்றிரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் இன்று மாலை சந்தித்து உரையாடினார்கள்.

இப்பேச்சின்போது கூறப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:-

1. அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது தமிழ்த் தேசியப் பிரச்சினையுடன் தொடர்புடைய விடயம். ஆதலால் இது அரசியல் ரீதியாக எதிர்நோக்கப்பட வேண்டும். இதுவரை இது அரசியல் ரீதியாக அணுகப்பட்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாக அணுகப்படவேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.

2. யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிவடைந்தவுடன் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருக்கின்றார்கள். அவர்களை தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்றது. அவர்களுக்கு எதிராகத் தாமதம் இல்லாமல் தண்டனை வழங்கியிருந்தால் தற்போது தண்டனைக்காலம் நிறைவேறி வெளியே வந்திருப்பார்கள்.

3. இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பலருக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே அவர்களுக்கெதிரான சாட்சியமாக இருக்கிறது. இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றது. இப்புதிய சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சாட்சியமாக முடியாது.இந்தச் சூழலில் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

4. 1971ஆம் ஆண்டும் 1988, 1989 ஆம் ஆண்டுகளிலும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய பலர் விடுவிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்பு முன்னைய அரசின் தீர்மானத்தின்படி அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய 12 ஆயிரம் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். ஆகையால் இந்தக் கைதிகளைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது. அவர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

5. சிறைக் கைதிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள். எமது வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்கள். இவர்களுக்கு ஆதரவாக – இவர்களின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புக்களும் , மக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் பலவித போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இவையெல்லாம் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.

6. தமிழ் மக்களின் கருத்து, கைதிகள் தமிழர்களாக இருக்கிற காரணத்தினால்தான், அரசு போதிய அக்கறை செலுத்தாமல் இருக்கின்றது என்பதாகும். இது நல்லிணக்கத்திற்கு பாதகமானது என்பனையும் நாம் வலியுறுத்தினோம்.

இவை அனைத்தையும் கேட்ட ஜனாதிபதி அடுத்த வாரம் பிரதமர், சட்டமா அதிபர் மற்றும் தேவையான அனைவரையும் அழைத்து இந்த விடயத்தைச் சாதகமாக அணுகி அரசியல் கைதிகளின் விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பதை முடிவு செய்வதாகத் தெரிவித்தார்

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ சுமந்திரன், எஸ்.சிவமோகன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *