உரிய தீர்வை அரசு உடன் தராவிடின் பட்ஜட்டை எதிர்க்கவேண்டி வரும்! – மாவை எம்.பி. பகிரங்க எச்சரிக்கை

“அரசியல் கைதிகள் விடுதலை, நில விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவை தீர்க்கப்படா விட்டால் அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் வரவு – செலவுத் திட்டத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டி ஏற்படலாம்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா.

நாளைமறுதினம் புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் தீர்க்கமான முடிவுகளைக் கூட்டமைப்பு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐனாதிபதியின் உத்தியோகபூர்வப் பணி நடமாடும் சேவையின் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நிகழ்வு பருத்தித்துறை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது.இதில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எங்கள் கட்சி ஐனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருக்கின்றது. அதன்போது நீதி கோரி நிற்கும் கைதிகளைப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரியுள்ளது.

கைதிகள் விடுதலை தொடர்பில் நாங்கள் கோரிக்கை விடுத்து உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

கைதிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை நிறுத்துமாறு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் கேட்டிருந்த நிலையில் நாமும் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தோம். இதன்போது மனம் விட்டுக் கலந்துரையாடி போராட்டத்தை ஒத்திவைக்கத் தாம் இணங்குகின்றனர் என எம்மிடம் அவர்கள் கூறியிருந்தனர்.

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கவேண்டுமென்றும் தமிழ் அரசியல் கைதிகள் எம்மிடம் கேட்டிருந்தனர். நாம் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கவேண்டுமென்று இங்கு பலரும் கூக்குரல் கொடுக்கின்றார்கள். ஆனால், இவர்கள் சொல்வதற்கு முன்னரே இந்த அரசுக்கு நாங்கள் தொடர்ச்சியாக ஆதரவளிக்க வேண்டுமா? இல்லையா? என்பதைச் சென்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் கூட நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.

இது தனியே தமிழ் அரசியல் கைதிகள் விடயப் பிரச்சினை மட்டுமல்ல. நிலப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இனப்பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றது.

நாம் ஐனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியதை சிறையிலுள்ளவர்களுக்குச் சொன்னோம். அத்தோடு எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம். அங்கே திட்டவட்டமான தீர்மானத்தை தமிழ் அரசியல் கைதிகள் சார்பிலும் எடுப்போம் என்று தெரிவித்தோம்.

தீர்க்கமான முடிவை எடுக்கவுள்ளதாக நாம் கூறிய நம்பிக்கையின் நிமிர்த்தம்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சொல்லியிருக்கின்றார்கள். நாங்களும் அதற்கு உடன்பட்டுள்ளோம்.

ஆயினும் அன்றைய கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் ஏதும் எங்களுக்குப் பொருத்தமில்லாது இருந்தால் அடுத்த கட்டம் என்னவாகஇருக்குமென்று உங்களிடம் பேசுவோம் என்று நான் குறிப்பிட்டிருக்கின்றேன். அவ்வாளவுதான் இடம்பெற்றிருக்கின்றது.

கைதிகள் விடுவிப்பு நடைபெறாவிட்டால் நாங்கள் பட்ஜட்டை எதிர்ப்போம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி நடக்கலாம்.

கைதிகள் விடுதலை, நில விடுவிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்க தீர்வைக் காண வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் பலரைத் தொடர்ச்சியாகத் தடுத்து வைத்திருப்பது பயங்கரவாதத் தடைச் சட்டம் தான். அந்தச் சட்டம் மீளப் பெறப்படுமென்று அரசு வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. அற்கமைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதனை விடுத்து அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக இன்னொரு சட்டத்தை கொண்டு வரத் தேவையில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *