முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே தவிர்த்த அவுஸ்திரேலிய அணித் தலைவர்!

“ ஆமதாபாத் மைதானத்துக்கு வரும் லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனமாக்குவதே எனக்கு மனநிறைவைத் தரும்”

இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் நாள் ஆஸ்திரேலியக் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த வார்த்தையைப் பேசினார்.

கம்மின்ஸ் பேசிய இந்த வார்த்தைகளை ஆதிக்க மனநிலையோடு, ஒப்பிடுவது முடியாது. கம்மின்ஸ் வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை.

அது ஏன் என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

  • எதிரணியின் மூளையோடு விளையாடும் கேப்டன்கள்

கடந்த 1990களில் இருந்து 2000 ஆண்டுகள் வரை ஆஸ்திரேலிய அணியில் உருவாகிய கேப்டன்களான மார்க் டெய்லர், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் எதிரணி வீரர்களோடு மட்டுமல்லாது அவர்களின் மனநிலையோடும் சேர்ந்து விளையாடக்கூடியவர்கள்.

ஒரு போட்டியில் குறிப்பிட்ட இரு வீரர்கள், அல்லது ஒரு பேட்டர் நல்ல ஃபார்மில் இருந்தால் அவரிடம் வம்பிழுப்பது, சூடான வார்த்தைகளை விடுவது என அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வேலையில் ஈடுபடும் வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

  • கம்மின்ஸ் எப்படி மாறுபட்ட கேப்டன்?

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் அரிதான கேப்டனாகக் கிடைத்தவர் பாட் கம்மின்ஸ். “எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து, கவனத்தை திருப்பி வெற்றி பெறுவதில் நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. தரமற்ற விஷயங்களை விரும்பவில்லை” என்று ஒருமுறை வெளிப்படையாகவே ஊடகங்களுக்கு பேட்டியளித்து வியக்க வைத்தவர் பாட் கம்மின்ஸ்.

இதுவரை கிரிக்கெட் வட்டாரங்களில் பாட் கம்மின்ஸ் மீது எந்தவிதமான ஸ்ட்லெட்ஜிங் புகாரும் இருந்தது இல்லை என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இறுதி ஆட்டத்தில்கூட, முதல் 15 ஓவர்கள் பாட் கம்மின்ஸ் வழக்கமான கேப்டன் பணியை மட்டும்தான் செய்து வந்தார். விராட் கோலி, ராகுல் கூட்டணி பிரி்த்து கோலியை இன்சைட் எட்ஜ் மூலம் ஆட்டமிழக்கச் செய்தபோதுதான் கம்மின்ஸ் தன்னுடைய மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்று கைகளை உயர்த்தி பம்பிங் செய்தார். அதுவரை இறுக்கமான முகத்துடன், பலவிதமான யோசனைகளுடனே இருந்தார்.

  • பாண்டிங் -கம்மின்ஸ்

2007ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியின்போது ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில், “ எங்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மோதுகிறது. ஜேக்ஸ் காலிஸ் சிறந்த வீரர்தான், நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார், திறமையான ஆல்ரவுண்டர்தான். ஆனால் எங்களுக்கு எதிராக அவரால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களின் திட்டம் சரியாக இருந்தால் காலிஸை வீழ்த்திவிடுவோம்” என்று பேசினார். பாண்டிங்கின் இந்தப் பேச்சில் எதிரணி வீரர்களை குறைத்துமதிப்பிடும் போக்கு இருந்ததாக மதிப்பிடப்பட்டது.

ஆனால், இப்போது கேப்டனாக இருக்கும் கம்மின்ஸ் இந்திய அணி குறித்தோ, வீரர்கள் குறித்தோ இதுவரை ஒரு வார்த்தைகூட அவதூறாக, குறைத்துமதிப்பிட்டோ பேசவில்லை. இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தபோது அவர்களை நோக்கி எந்தவிதமான சீண்டலும் இன்றி சிறிய புன்முறுவலுடன் கம்மின்ஸ் கடந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டதே ஒரு விபத்துதான். கேப்டனாக இருந்த டிம் பெய்ன் ஒரு சர்ச்சையில் சிக்கியதால், அந்தப் பொறுப்பை கம்மின்ஸ் ஏற்றார். கம்மின்ஸ் தலைமையில் ஆஷஸ் தொடரை அற்புதமாக வென்று திரும்பிய ஆஸ்திரேலிய அணியை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று அந்தப் பட்டத்தையும் கம்மின்ஸ் வென்று கொடுத்தார்.

கடந்த 65 ஆண்டுகளில் ரே லிண்ட்வாலுக்குப்பின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ஆஸ்திரிலேய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

  • விமர்சனம், கேலிப் பேச்சு

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டபோது அவர் அதற்கு முன் 4 ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருந்திருந்தார். எந்தவிதமான அனுபவமும் இல்லாத ஒரு வீரரை முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பைத் தொடருக்கு ஆஸ்திரேலிய வாரியம் கேப்டனாக நியமித்துள்ளது என்று விமர்சனங்களும், கேலிப்பேச்சுகளும் வந்தன.

அதற்கு ஏற்றாற்போல், லீக் போட்டிகளில் முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி தோற்றது கம்மின்ஸ் கேப்டன்ஷிப்புக்கு கடும் நெருக்கடிகளை அளித்தது. ஆனால், அதன்பின் ஒவ்வொரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் சரியான திட்டமிடலை களத்தில் செயல்படுத்தி வெற்றி தேடித்தந்த பெருமை கம்மின்ஸை சாரும்.

இந்த உலக்க கோப்பைத் தொடரில் 11 ஆட்டங்களில் இறுதிப்போட்டித் தவிர கம்மின்ஸ் பெரிதாக எந்தப் போட்டியிலும் சிறப்பாகப் பந்துவீசவில்லை. இறுதிப் போட்டியில் கம்மின்ஸ் வீசிய ஒவ்வொரு ஓவரும் லைன் லெங்த்தில் இருந்து மாறவில்லை. ஒரு கேப்டனாகவும், பந்துவீச்சாளராகவும் பொறுப்புடன் செயல்பட்டு மற்ற பந்துவீச்சாளர்களையும் கம்மின்ஸ் செயல்பட வைத்தார்.

  • கட்டம் கட்டிய கம்மின்ஸ்

இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆஸ்திரேலிய அணியினர் தனித்தனியாக ஸ்கெட்ச் அமைத்தனர் எனக் கூறப்படுகிறது. ரோஹித் சர்மா பலவீனம் என்ன, அவரை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது, கோலியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவது எப்படி, ராகுலுக்கு நெருக்கடி அளிப்பது என ஒவ்வொருவருக்கும் தனித்தனி திட்டத்தை வகுத்திருந்தனர்.

அந்த திட்டத்தை வகுப்பது மட்டுமல்லாமல் அதை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த தெரிந்த கேப்டன் இருப்பது அவசியம். அந்தப் பணியை நேற்று கம்மின்ஸ் மிகுந்த கச்சிதமாகச் செய்தார். ரோஹித் சர்மாவை பெரிய ஷாட்களை அடிக்கவைத்து அவருக்கான வலையில் அவரை சிக்கவைத்தனர்.

விராட் கோலி பவுண்டரி அடிக்கும் திசையில் கட்டுக்கோப்பான கூடுதல் பீல்டர்களை நிறுத்தி அவரை திணறவைத்து, பொறுமையிழந்து ஆட்டமிழக்க வைத்தனர். இதுபோன்று ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பிளான் அமைத்திருந்தனர்.

முதல் 10 ஓவர்கள் வேண்டுமானால் இந்திய அணியின் பக்கம் ஆட்டம் சென்றிருக்கும். ஆனால், மீதமுள்ள 40 ஓவர்களும் ஆஸ்திரேலிய கட்டுப்பாட்டில்தான் ஆட்டம் இருந்தது.

  • பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தேவைப்படும் நேரங்களில் பொறுப்புடன் ஆடக் கூடியவர் கம்மின்ஸ் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது முதல் டெஸ்ட் போட்டியில் 281 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது. 8 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ் 44ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்ஹடே மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை தொடரவைக்க ஸ்ட்ரைக்கை அளித்துவிட்டு கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ரன்களுடன் அவருக்கு ஒத்துழைத்து பேட் செய்தார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தால் அரையிறுதி வருவதே சிக்கலாக மாறியிருக்கும். ஒரு கேப்டனாக இருந்து அணியின் வெற்றிக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் தேவைப்படும் அம்சங்களை கம்மின்ஸ் வழங்கியுள்ளார்.

  • குறைந்த வயதில் ஆஸ்திரேலிய அணியில் இடம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் 2011ம் ஆண்டு 18 வயதிலேயே கம்மின்ஸ் இடம் பெற்றார். சிறுவயதிலேயே கதவில் சிக்கி தனது வலதுகை நடுவிரலின் பாதியை இழந்தவர் கம்மின்ஸ். வலது கை பந்துவீச்சாளரான அவர், இந்தக் குறைபாட்டுடன், விடாமுயற்சியால் உலகளவில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்து வருகிறார்.

ரியான் ஹாரிஸ் ஓய்வுபெற்றபின் அவரின் இடத்தை நிரப்ப மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டபோது, கம்மின்ஸ் அந்த இடத்தை நிரப்ப வந்தார். ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப்பின் 2017ம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் இடம் பெற்ற திடமான நம்பிக்கை கொண்டவர்.

  • வேறுபட்டுத் தெரிந்த கேப்டன்

கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக வந்தது முதல் இதற்கு முன் இருந்த மற்ற கேப்டன்களில் இருந்து தன்னை வேறுபடுத்தி செயல்பட்டார். மற்ற கேப்டன்களான ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், கிளார்க், டிம் பெய்ன் போல் கம்மின்ஸ் தன் முகத்தை சிடுசிடுவென களத்தில் வைத்திருக்கவில்லை.

எப்போதும் புன்னகையுடன், அமைதியான முகத்துடன், சகவீரர்களை அனுசரித்துச் செல்லும் போக்கை கம்மின்ஸ் கடைபிடித்தார். பந்துவீச்சாளர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அவர்களின் நோக்கத்தின்படி பீல்டிங்கை மாற்றி அமைத்து செயல்பட்டார்

கம்மின்ஸ் கேப்டன்சியைப் பார்த்து, அவர் விளையாடிய பென்ரித் மவுன்டைன்ஸ் கிளப் பயிற்சியாளர் மைக்கேல் ஹோலோகன் கூறுகையில் “ கம்மின்ஸ் புன்னகைதான் எவ்வளவு பெரியது, அழகானது. அவர் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்து விடுவார் .இதுதான் அவரை சாம்பியனாக வைத்திருக்கிறது” என பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்தில் எப்போதாவதுதான் உணர்ச்சிவசப்பட்டு சத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார், மற்ற நேரங்களில் அவரின் புன்னகை மட்டுமே அனைத்துக்கும் பதில் அளிக்கும். எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தை, சூடான கருத்து மோதல்களை, எதிரணி பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்வதை விரும்பாதவர் கம்மின்ஸ் என்பதை மைதானத்திலேயே பார்க்க முடியும்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை
  • முஸ்லிம் வீரருக்காக மது விருந்தை தவிர்த்தவர்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய சக வீரர்கள் மீது பெரும்பாலும் குறைகூறாமல் அவர்களுக்கு ஆதரவாகவே கம்மின்ஸ் கருத்துக்களை கூறக்கூடியவர். தோல்விக்கு கேப்டனாக நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் கம்மின்ஸ் தோல்விக்கான பழியை சக வீரர்கள் மீது சுமத்துவதை விரும்பாதவர்.

சக வீரர்களின் உணர்வுகளையும் கம்மின்ஸ் மதிக்கக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சாம்ப்பைன் மது விருந்து அளிப்பார்கள்.

ஆனால், இஸ்லாம் மதப்படி மது அருந்துவது தடை செய்யப்பட்டது என்பதால், அந்த விருந்துகளில் கவாஜா பங்கேற்காமல் இருந்தார். இதைக் கவனித்த கேப்டன் கம்மின்ஸ், சக வீரர்களிடம் இதை எடுத்துக்கூறி, கவாஜாவுக்காக, சாம்பைன் மது விருந்துக் கொண்டாட்டத்தை நடத்தாமல் தவிர்த்தார்.

கம்மின்ஸும், சக வீரர்களும் தனக்காக சாம்பைன் கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்ற செய்தியை அறிந்த கவாஜா மெய்சிலிர்த்துப் போனார். கேப்டன் கம்மின்ஸ் சக வீரர்களின் உணர்வுகளை மதிக்கும் இந்த செயல்பாடு வீரர்கள் மத்தியில் பெருத்த மரியாதையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் கொரோனா கடுமையாகத் தாக்கியபோது, ஆக்சிஜன் தேவைக்காக 50 ஆயிரம் டாலர் நிதியுதவி அளித்தவர் பாட் கம்மின்ஸ்

  • கேப்டன் திறமையை நிரூபித்துள்ளார்

கம்மின்ஸ் கேப்டன்சி குறித்து விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்துக் குமார் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகையி்ல் “அனுபவமில்லாத கேப்டனாகத்தான் உலகக் கோப்பைக்குள் கம்மின்ஸ் வந்தார். உலகக் கோப்பைத்தொடருக்கு முன் தென் ஆப்பிரி்க்காவிடம் தோல்வி, இந்திய அணியிடம் தோல்வி என நெருக்கடி இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று கொடுத்தபோது கம்மின்ஸ் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். அவருக்குள் கேப்டன் திறமை இருப்பது அப்போதுதான் தெரிந்தது.

கம்மின்ஸ் திறமை இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தனித்தன்மையுடன் வெளிப்பட்டது. இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான வியூகத்தை கம்மின்ஸ் வகுத்தார். வியூகம் வகுப்பது முக்கியமில்லை அதை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தி கோப்பையை வென்று கொடுத்தபோது கம்மின்ஸ் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.” என்று கூறினார்.

“உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய இதற்கு முந்தைய கேப்டன்களான ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ், டெய்லர் ஆகியோர் அனுபவம் நிறைந்தவர்கள். ஆனால், அனுபவம் குறைந்த ஒருவர் அணியை வழிநடத்தி, கோப்பையை வென்று கொடுத்தது கம்மின்ஸ் தலைமை மட்டும்தான்.”

“கம்மின்ஸ் தலைமை மட்டும் காரணமல்ல, ஆஸ்திரேலிய அணியில் 7 வீரர்கள் கடந்த 2015 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விளையாடி வருகிறார்கள். அனுபவம் மிக்க வீரர்கள் கம்மின்ஸுக்கு பக்கபலமாக இருந்ததும், கோப்பையை வெல்ல முக்கியக் காரணம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல் ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதில் பழக்கப்பட்டுவிட்டதற்கு ஐபிஎல் காரணமா என்பதற்கு முத்துக் குமார் விளக்கம் அளிக்கையில் “ஆஸ்திரேலிய வீரர்கள் துணைக் கண்டத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு ஐபிஎல் டி20 லீக் முக்கியக் காரணம். ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்து கொண்டதால் எளிதாக பழகிவிட்டனர். இது உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கியக் காரணம்” என்று தெரிவித்தார்

ஒரு லட்சம் ரசிகர்களை மவுனமாக்குவேன் என்று கம்மின்ஸ் பேசிய பேச்சு ஆதிக்க மனப்போக்கு இல்லை என்று முத்துக் குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் “கம்மின்ஸ் பேசியதன் உள்ளர்த்ததை நாம் தவறாக எடுக்கக் கூடாது. அது ஆதிக்க மனப்போக்கு அல்ல. ஆஸ்திரேலியா இயல்பாகவே விளையாட்டு சார்ந்த நாடு. அங்கிருக்கும் வீரர்கள் எதிரணியினரை இதுபோன்றுதான் இயல்பாகவே பேசுவார்கள். இது ஆதிக்க மனப்போக்கு என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. இது முழுமையான ஸ்போர்ட்மேன்ஷிப், ஆஸ்திரேலியர்களின் மனநிலையை கம்மின்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். மற்ற வகையில் உள்நோக்கம் கொண்டதாக நான் பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *