மாவனல்லை செரண்டிப் வரலாற்று வெற்றி!

ப்ரீமியர் லீக் பிரிவு 1 கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் எஸ்.எல்.டி.பி. (SLTB) அணியை 3:1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய மானல்லை செரண்டிப் கழகம், சப்ரகமுவ மாகாணத்தின் முதல் அணியாக டயலொக் சம்பியன் லீக்கிற்கு தகுதி பெற்றது.

ப்ரீமியர் லீக் பிரிவு 1 (டிவிசன் 1) கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் மாவனல்லை செரண்டிப் மற்றும் எஸ்.எல்.டி.பி. அணிகளுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மாவனல்லை செரண்டிப் 1:0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றது. 25ஆவது நிமிடத்தில் அவ்வணி சார்பில் இவான்ஸ் அசன்டே முதலாவது கோலை புகுத்தியிருந்தார்.
ஆக்ரோசமான இரண்டாம் பாதியாட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.எல்.டி.பி அணியின் எஸ்.சஞ்சீவ நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்தும் சிறப்பாக செயற்பட்ட இவான்ஸ் 59ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலை அபாரமாக செலுத்தினார்.
செரண்டிப் 2:0 என முன்னிலைப்பெற்றிருந்த நிலையில் எஸ்.எல்.டி.பி. சார்பில் ருவன் சானக முதலாவது கோலை செலுத்த, போட்டியை சமநிலைப்படுத்தி எஸ்.எல்.டி.பி. போராடியது. எனினும், செரண்டிப் அணியின் நட்சத்திர வீரர் மொஹமட் ராஜ்செரோன் 79ஆவது நிமிடத்தில் செரண்டிப் சார்பில் மற்றுமொரு கோலை செலுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் 3:1 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த செரண்டிப் கழகம் ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த பொலிஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 
1980ஆம் ஆண்டு மாவனல்லை, ஹிங்குளோயா பிரதேசத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட செரண்டிப் விளையாட்டுக் கழகம், இந்த வெற்றியின் மூலம் சப்ரகமுவ மாகாணத்தின் முதல் அணியாக முதன்முறையாக டயலொக் ப்ரீமியல் லீக்கிற்கு தகுதி பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
(மாவனல்லை நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *