மக்கள் இதயத்தை வென்ற கால்பந்து நடுவர்!

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் போலந்தைச் சேர்ந்த சைமன் மார்சினியாக் நடுவராக செயல்பட உள்ளார். 41 வயதான சைமன் மார்சினியாக் 2011-ம் ஆண்டு உலக கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) நடுவர் அந்தஸ்தைப் பெற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சைமன் மார்சினியாக்குக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது.

நிமிடத்துக்கு 100-க்கும் அதிகமான முறை இதயத்துடிப்பு இருக்கும் ‘டாச்சி கார்டியா’ என்னும் கோளாறால் அவதிப்பட்டார் சைமன். சுமார் ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ சிகிச்சையில் இருந்த சைமன் நலம் பெற்று தற்போது மீண்டும் கால்பந்து நடுவர் பணிக்குத் திரும்பியுள்ளார். இறுதிப் போட்டியில் பணியாற்ற உள்ளது குறித்து சைமன் கூறும்போது, “சுமார் ஒன்றரை ஆண்டுகளாக டாக்கிகார்டியா பிரச்சினையால் நான் அவதிப்பட்டேன். அந்தக் காலங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தன. இதனால் கால்பந்து நடுவர் தொழிலை தற்காலிகமாக கைவிட வேண்டியிருந்தது. இதனால் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது கடவுள் மீண்டும் எனக்கு வாழ்க்கையை வழங்கிவிட்டார். இது எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது” என்றார்.

ஏற்கெனவே கத்தார் உலகக் கோப்பையின் லீக் சுற்று, நாக்-அவுட் சுற்றுகளில் அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் மோதிய ஆட்டங்களில் சைமன் நடுவராகப் பணியாற்றியிருக்கிறார். களத்தில் இரு அணி வீரர்களின் போக்கையும் கவனித்து மிகச் சிறந்த முடிவுகளை வழங்கக் கூடியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சைமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *