நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாளா என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இவர், கம்லா ராஜா மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள், அதிர்ந்துள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையோடு ஆரோக்கியமாகப் பிறந்தபோதும், நான்கு கால்களோடு இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் சிறப்புக் குழந்தைகள் நலப்பிரிவில் வைத்து, குழந்தை தொடர்ந்து சிகிச்சை அளித்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “குழந்தை நான்கு கால்களோடு, உடல் குறைபாடோடு பிறந்துள்ளது. சில நேரங்களில் கருவானது இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, உடல் இரண்டு இடங்களில் வளர்ச்சி அடையும்.

இதற்கு `Ischiopagus’ என்று பெயர். அதேபோல இந்தப் பெண் குழந்தையின் இடுப்பு பகுதிக்குக் கீழ் இரண்டு கூடுதல் கால்கள் வளர்ந்துள்ளன. அந்தக் கூடுதல் கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன.

மருத்துவர்கள் குழந்தைக்கு வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என ஆராய்ந்து வருகின்றனர். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில், அறுவைசிகிச்சையின் மூலமாகச் செயலற்ற கால்கள் அகற்றப்படும்’’ என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *