சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலின் பின்னணி!

சாத்தானின் வசனங்கள்’ (The Satanic Verses) நாவலாசிரியர் ‘சல்மான் ருஷ்டி’ மேடையில் நின்றபோது மோசமாக தாக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நாவலை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் மரண அச்சுறுத்தல்களை அனுபவித்து வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் நேற்றைய தினம் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது இனந்தெரியாத நபரொருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

புக்கர் பரிசு வென்ற (Booker Prize winner) 75 வயதான இவர், சௌதாகுவா நிறுவனத்தில் (Chautauqua Institution) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிக் கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான ஓர் ஆண் நபர் மேடையில் வேகமாக ஏறிச்சென்று , ருஷ்டியையும் அவரை நேர்காணல் செய்தவரையும் தாக்கியதாக நியூயோர்க் மாநில காவல்துறையினர் தெரிவித்தனர்.

“ருஷ்டிக்கு கழுத்தில் ஒரு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது” என்று பொலிஸ் அறிக்கை கூறுகிறது.

அவசரமாக உலங்கு வானூர்தி மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ருஷ்டி உயிருடனிருப்பதாக நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் (Kathy Hochul) செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

இதேவேளை நேர்காணல் செய்த ஹென்றி ரீஸுக்கும் (Henry Reese)
தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

ரீஸ், துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலின் கீழ், நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு புகலிடத்தை வழங்கும் ஓர் இலாப நோக்கற்ற நிறுவனத்தின் இணை நிறுவுனர் (co-founder) ஆவார்.

இந்தியாவில் பிறந்த நாவலாசிரியர் ருஷ்டி, 1981 இல் மிட்நைட்ஸ் சில்ட்ரன் (Midnight’s children)மூலம் புகழ் பெற்றவர். இங்கிலாந்தில் மட்டும் ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட நாவல் இதுவாகும்.

ஆனால் 1988 இல் அவரது நான்காவது புத்தகமான சர்ச்சைக்குரிய ‘சாத்தானின் வசனங்கள்’ (The Santanic Verses) அவரை ஒன்பது ஆண்டுகள் மறைந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு இட்டுச்சென்றது.

சர்ரியலிஸ்ட், பின்-நவீனத்துவ நாவல் (surrealist, post-modern novel) சில முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது!! அதன் உள்ளடக்கம் தெய்வ நிந்தனை எனக் கருதப்பட்டதால், சில நாடுகளில் தடை செய்யப்பட்டது.

புத்தகம் வெளியாகிய பின்னர்,
ஒரு வருடத்தில், ஈரானின் உயர் தலைவராகிய ‘அயத்துல்லா கொமெய்னி’ (Ayatollah Khomeini) ருஷ்டி அவர்களை தூக்கிலிட உத்தரவிட்டார்.
அதற்காக அவர் ‘ஃபற்வா’வில் (fatwa) 3மி டொலர் (2.5மில்லியன் பவுண்ட்) வெகுமதியையும் வழங்கினார்!

ஓர் இஸ்லாமிய மதத் தலைவரால் வழங்கப்பட்ட சட்ட ஆணை அது!
ருஷ்டியின் தலையின் மீதான பரிசுத்தொகை தொடர்ந்து அமுலில் இருந்து வந்தது!
ஈரான் அரசாங்கம் ‘கொமெய்னி’யின் ஆணையிலிருந்து விலகியிருந்தாலும், ஒரு அரை-அதிகாரபூர்வ ஈரானிய மத அறக்கட்டளை (quasi-official Iranian religious foundation), 2012 இல் மேலும் $500,000 இனை ருஷ்டியின் தலை மீதான வெகுமதியாக சேர்த்துக்கொண்டது.

ருஷ்டி, பிரிட்டிஷ்-அமெரிக்க குடிமகன் ஆவார். நடைமுறைச் செயற்பாடுகளைப் பின்பற்றாத முஸ்லிம்களுக்கு (Non-practising Muslims) பிறந்தவரான ருஷ்டி ஒரு நாஸ்திகர் ஆவார்.

பல இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் தனது வேலையை, பலவித சிரமங்களுக்கு மத்தியில் தக்கவைத்துக்கொண்ட ருஷ்டி, கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவராக மாறியவர்.

பிந்திய தகவலின் படி இப்போது வென்டிலேட்டரில் (Ventilator) இருக்கின்றவரான ருஷ்டியால் பேச முடியவில்லை எனவும் இவர் தனது ஒரு கண்ணை இழக்க நேரிடும் எனவும் நியூயோர்க்கில் இவர் சிகிச்சை பெறும் வைத்தியசாலை அறிக்கைகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *