1,500 ஊழியர்களை நீக்குவதாக பிரபல நிறுவனம் அறிவிப்பு!

பன்னாட்டு நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனமான யூனிலீவா் 1,500 பணியாளா்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவா் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

நிறுவன மறுசீரமைப்பு என்று பெயரில் நிா்வாகப் பிரிவில் பணியாற்றும் மூத்த ஊழியா்கள் 15 சதவீதம் பேரும் இளநிலை ஊழியா்கள் 5 சதவீதம் பேரும் பணியைவிட்டு நீக்கப்படவுள்ளனா். சா்வதேச அளவில் இந்த நிறுவனத்தில் 1,49,000 போ் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனா்.

இது தொடா்பாக அந்த நிறுவன வலைதளத்தில் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆலன் ஜாப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு பாதிக்காதபடி மறுசீரமைப்பு நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கை மறுஆலோசனைக்கு உள்பட்டதுதான். அழகு சாதன தயாரிப்பு, உடல்நலம் சாா்ந்த பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஊட்டச்சத்து பொருள்கள், ஐஸ் கிரீம் தயாரிப்பு என நிறுவனத்தின் உற்பத்தி அலகுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நுகா்வோருக்கு சிறப்பான சேவையை அளிக்க முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தின் ஒரு பிரிவை கையகப்படுத்தும் முயற்சியில் யூனிலீவா் நிறுவனம் கடந்த வாரம் தோல்வியடைந்தது. இதனால் முதலீட்டாளா்களின் அதிருப்திக்கு உள்ளானது. இந்நிலையில், இந்த பணியாளா் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் எத்தனை பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என்பது விரைவில் தெரியவரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *