பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு வீடு கட்டிய தம்பதி!

கடந்த பல ஆண்டுகளாகவே டூத்பிரஷ், தண்ணீர் பாட்டில், பேக்கேஜிங் என பிளாஸ்டிக் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நம் உணவிலும் மைக்ரோபிளாஸ்டிக் இருக்க வாய்ப்புள்ளதாக ’டைம்’ நாளிதழ் தெரிவிக்கிறது.

1950-ம் ஆண்டு முதல் நாம் 8.5 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்துள்ளோம். தற்போது சுமார் 60 சதவீத பிளாஸ்டிக் நிலங்களில் கொட்டப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்சனையைக் கையாளவும் அவற்றை மறுசுழற்சி செய்யவும் உத்தர்கண்ட் பகுதியின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹர்டோலா கிராமத்தைச் சேர்ந்த இந்த தம்பதி நான்கு அறைகள் கொண்ட தங்குமிடத்தை பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கியுள்ளனர்.

தீப்தி ஷர்மா மற்றும் அவரது கணவர் அபிஷேக் ஷர்மா உருவாக்கியுள்ள இந்த தங்குமிடம் 26,000 பாட்டில்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த பாட்டில்கள் முதலில் சிறு திட்டுகளாக உருவாக்கப்பட்டு பின்னர் ஒன்றிணைக்கப்பட்டு முழுமையான சுவராக கட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு சுமார் 100 பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒன்றாக கட்டப்பட்டு சல்லடைக் கம்பிகளால் மூடப்பட்டு சுவர் வலுவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன சுவர் நிலையாக இருப்பதுடன் வெப்பநிலை குறைவதையும் தடுக்கிறது.

இந்தத் தம்பதி தரைகள் அமைக்க பழைய டயர்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் வீட்டை அலங்கரிக்க விஸ்கி பாட்டில்களைக் கொண்டு விளக்குகள் தயாரித்துள்ளதாகவும் ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது.

இவர்கள் கட்டியுள்ள இந்த வீட்டின் ஒவ்வொரு அறையும் 10 அடிக்கு 11 அடி என்கிற அளவில் இருப்பதால் எட்டு பேர் வரை தங்கும் வசதி கொண்டதாக அமைந்துள்ளது. கட்டுமானs செலவுகளைப் பொறுத்தவரை பணியாளர்கள், மூலப்பொருட்கள் உட்பட மொத்தம் 1.5 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது.

மக்கள் பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக உத்திர பிரதேசத்தின் மீரத் பகுதியில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் தீப்தி தனது கணவருடன் இணைந்து இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.

’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

”நாங்கள் மலைப்பகுதிகளுக்கு அதிகம் பயணம் செய்வோம். ஒவ்வொரு முறை செல்லும்போதும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாத அல்லது முறையாக அப்புறப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கழிவுகளின் அளவைக் கண்டு மனம் வருந்துவோம். அப்போதுதான் மலைகளில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் முறைகளை ஆராயவேண்டும் என்று தீர்மானித்தோம்.

மலைப்பகுதியில் உள்ளவர்கள் அவற்றை மறுசுழற்சி செய்யவேண்டும் அல்லது அவர்களால் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் மலைப்பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அவை திரும்ப எடுக்கப்படவேண்டும் என்று நினைத்தோம்,” என்றார்.

இவர்கள் உருவாக்கிய தங்குமிடம் தற்போது தயாராக உள்ளது. இதை பதிவு செய்து முடித்த பிறகு இந்த தம்பதி பிளாஸ்டிக்கைக் கொண்டு வீடுகள், சிறு கடைகள், கழிப்பறைகள் போன்றவற்றைக் கட்டும் விதம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். அபிஷேக் கூறும்போது,

“நாங்கள் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீடு கட்டத் தொடங்கினோம். மொத்த கட்டுமானப் பணிகளும் நிறைவடைய கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆனது. நொய்டாவிலோ காசியாபாத்திலோ அல்லாமல் மலைப்பகுதிகளில் சொந்தமாக ஒரு வீடு இருக்கவேண்டும் என்று 2016-ம் ஆண்டு லான்ஸ்டாவ்ன் பகுதிக்கு பயணம் மேற்கொண்டபோது தீர்மானித்தோம். அப்போதுதான் இந்த கட்டுமானப் பணியை திட்டமிட்டோம். 2017-ம் ஆண்டு நிலத்தை வாங்கி பணியைத் தொடங்கினோம்,” என்கிறார்.

10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சேகரிப்பு தொட்டியுடன் இணைக்கப்படும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை கட்டவும் இந்தத் தம்பதி திட்டமிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *