மெட்ராஸில் பிறந்து மகாராஜாவை மணமுடிக்க முஸ்லிமாக மாறிய வதோதரா மகாராணி சீதாதேவி

“வதோதராவில் ஒரு விமான நிலையத்தின் ரன்வேயில் டகோட்டா விமானம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அது கடந்த இரண்டு நாட்களாக அங்குதான் இருக்கிறது. நிறைய சுமையுடன் மோட்டார் கார்கள் சில வந்தன. அமெரிக்காவை சேர்ந்த அந்த விமானத்தின் விமானி என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தார்.”

சுதந்திரம் கிடைப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஜா தனது பேரரசும் சிற்றரசுகளும் இதற்கு மேல் நிலைத்திருக்காது என்பதை அறிந்தார். எனவே அவர்களின் உடைமைகளில் சிலவற்றை விற்க வேண்டியிருந்தது.”

“இந்த அமெரிக்க விமானி பிரிட்டன் அரசிடம் இருந்து டகோட்டா விமானத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி இங்கு கொண்டு வந்தார். சில மாற்றங்கள் செய்த பிறகு அவர் பொருட்கள் மற்றும் பயணிகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதி பெற்றார்.”

“இதைக் கருதி, வதோதரா மாநிலத்தின் விலைமதிப்பற்ற பொருட்கள் எடுத்துச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தன. விமானத்தில் இருந்து சிறிது தூரத்தில் நின்றுகொண்டு விமானி இச்சம்பவம் முழுவதையும் பார்த்துக் கொண்டிருந்தார்.”

“ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வந்தது. உள்ளிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க அழகான பெண் ஒருவர் வெளியே வந்தார். விமானத்தில் சாமான்கள் ஏற்றப்பட்ட பிறகு, அவர் காக்பிட்டின் பின்புறத்தில் அமர்ந்தார். அவருடன் இரண்டு பெண் பயணிகளும் உடனிருந்தனர்.”

அங்கு என்ன நடக்கிறது என்று விமானி புரிந்துகொண்டார். அதனால், ‘சாமான்களில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும், இதைக் கொண்டு செல்ல அதிக செலவாகும்’ என்று கூறினார்.

அந்தப் பெண் சற்றும் ஆச்சரியப்படவில்லை. இப்படி ஏதாவது நடக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கலாம். எனவே அவரது பர்சில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து, விமானியின் கண்களைப் பார்த்து, “உங்களுக்கு விதித்த கட்டளைகளைச் செய்து முடியுங்கள்,” எனக் கூறினார். இந்தத் திட்டத்தைப் புரிந்து கொண்ட விமானி ஐரோப்பா செல்லத் தயாரானார்.

‘அந்தப் பெண் வேறு யாருமல்ல, வதோதராவின் மகாராஜா பிரதாப் சிங் ராவ் கெய்க்வாட்டின் இரண்டாவது மனைவியான மகாராணி சீதா தேவிதான்.’

“அவர்களிடம் 56 பெட்டிகளில் வதோதராவின் அரச கருவூலத்தின் மதிப்புமிக்க பொருட்கள் இருந்தன”.

‘மகாராணி சீதா தேவி பாரிஸில் வசித்து வந்தபோது, ​​தன் விசுவாசிகள் சிலரிடம் இக்கதையைச் சொன்னார். இவ்வளவு துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் இதை எப்படிச் செய்ய முடியும் என்று சிலரால் நம்ப முடியவில்லை. ஆனால் இது புலிகளைக்கூட வேட்டையாடத் தெரிந்த மகாராணி சீதா தேவியாம்.”

ஆடை அணிகலன் நிபுணரும் எழுத்தாளருமான மைலன் வில்சனின் ‘வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ்: ட்ரெஷர்ஸ் அண்ட் லெஜெண்ட்ஸ்’ என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். மைலன் பழங்கால நகைகள் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்து அதன் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார்.

  • இந்திய அரச வாழ்க்கையில் சீதா தேவியின் பெயர் ஏன் சிறப்பு வாய்ந்தது?
சீதா தேவி
மகாராணி சீதா தேவி மற்றும் அவரது மகன் நான்காவது சாயாஜிராவ் கெய்க்வாட் ஆகியோருடன் வதோதராவின் மகாராஜா பிரதாப் சிங் ராவ்

வதோதரா மகாராணியின் காதல் கதை மட்டுமல்ல அவரது திருமணத்திலும் சர்ச்சை இருந்தது. வதோதராவின் மகாராஜா பிரதாப் சிங் ராவ் கெய்க்வாட் என்பவரை சீதா தேவி காதலித்தார்.

சீதாதேவிக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. வதோதராவின் ராஜா பிரதாப் சிங் ராவ் எட்டு குழந்தைகளுக்குத் தந்தை ஆவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களது திருமணத்தில் பல தடைகள் ஏற்பட்டன. இருப்பினும், அந்த நேரத்தில் சீதா தேவியின் செயல்கள் இந்திய அரச குடும்ப வரலாற்றில் தனித்துவமானதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் அரச காலத்தில் இருந்த காதல் கதைகளைப் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், சீதா தேவியின் கதை அவசியம் பேசப்படுகிறது. மகாராணி சீதா தேவியின் பெயர் இந்திய அரச வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்தது.

அவரது ஆளுமை மட்டுமல்ல, அழகிய வண்ணமயமான நகைகள் மற்றும் புடவைகளின் தொகுப்பு அந்நாட்களில் பேசுபொருளாக இருந்தது. அவர் அக்காலத்தின் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்த கவர்ச்சியான பெண் என்று ஆர்வலர்கள் நம்புகிறார்கள்.

அரச குடும்பங்களில் பெண்கள் தலைமுடியை மறைக்காமல் வெளியே செல்லாத நேரத்தில் அவர் பல மரபுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்துள்ளார்.

  • யார் இந்த சீதா தேவி? எப்படி வதோதரா மகாராஜாவின் மீது காதல் கொண்டார்?
சீதா தேவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீதா தேவி 1917ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் (இன்றைய சென்னை) பிறந்தார். அவர் பிதாபுரம் பேரரசின் அரசரான ஸ்ரீ ராஜ் ராவ் வெங்கடகுமார் மகாபதி சூர்ய ராவ் பகதூர் காரு மற்றும் சின்னம்மாம்பா ஆகியோரின் மகள். பிதாபுரம் அப்போது மெட்ராஸ் மாகாணத்தின் முக்கியமான சமஸ்தானமாக இருந்தது.

சீதா தேவியின் முதல் திருமணம் வியூரின் செல்வாக்கு மிகுந்த ஜமீன்தார் எம்.ஆர்.அப்பாராவ் பகதூருடன் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமின் மகளான இளவரசி நிலோபர் அவருடைய எஜமானி.

“கடந்த 1943ஆம் ஆண்டு, சீதா தேவி, மகாராஜா பிரதாப் சிங் ராவ் கெய்க்வாடை, மெட்ராஸில் உள்ள ரேஸ் கோர்ஸில் சந்தித்தார். இருவரும் காதலித்தனர்,” என்று கெய்க்வாட் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பிரதாப் சிங் ராவ் கெய்க்வாட்டின் மருமகனுமான ஜிதேந்திர சிங் கெய்க்வாட் பிபிசி குஜராத்திக்கு பிரத்தியேகமாகப் பேசியபோது கூறினார்.

“சீதாதேவி மிகவும் அற்புதமாக இருந்ததால், மகாராஜா அவரது அழகில் மயங்கினார். சீதாதேவியும் மகாராஜா பிரதாப் சிங் ராவின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.”

சர்தார் படேலின் கீழ் மாநில அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றிய வி. பி.மேனனின் ‘இந்திய மாநிலங்களின் ஒருங்கிணைப்பு’ (‘Integration of the Indian States’) என்ற புத்தகத்தில், “1939இல் அவர் வதோதராவின் அரியணை ஏறிய மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ஆலோசகர்களின் தவறான பேச்சைக் கேட்டு, அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், இது அவரது பதவியையும் கண்ணியத்தையும் பாதித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.(பக்கம் எண். 478).

இவர்களது காதல் கதையில் வந்த முதல் கஷ்டம் திருமணம்தான். இந்தத் திருமணம் அவ்வளவு எளிதாக இல்லை. இதற்கு சீதாதேவியின் கணவர் அப்பா ராவ், சீதாதேவியை விட்டுச் செல்லத் தயாராக இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, பிரதாப் சிங் ராவ் சட்ட ஆலோசனையைப் பெற்றார். இந்திய அரச வரலாற்றில் தனித்துவமான ஒரு சர்ச்சைக்குரிய அத்தியாயத்திற்கான ஆலோசனைகளை ஆலோசகர்கள் வழங்கினர்.

  • முதல் கணவரை விவாகரத்து செய்ய இஸ்லாம் மதத்திற்கு மாறிய சீதா தேவி
 சீதா தேவி

பட மூலாதாரம்,HISTORYOFVADODARA.IN

“பிரதாப்சிங் ராவ் 1929இல் மகாராணி சாந்தா தேவியை மணந்தார். சாந்தா தேவி கோலாப்பூரில் உள்ள கோர்படே குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கு 8 குழந்தைகள் இருந்தனர். சீதா தேவியும் 1933இல் சென்னை மாகாணத்தின் ஜமீன்தாரை மணந்தார், இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார்.

அக்டோபர் 1944இல், சீதா தேவி நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், இதனால் அவரது திருமணத்தை போலியானதாகக் கருதுவதாகவும் கூறினார்.

புத்தகத்தின்படி, சீதா தேவி முதலில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். பின்னர் தனது கணவரையும் இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி கேட்டுக்கொண்டார். அவரது கணவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், சீதாதேவி அவரிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். பின்னர் சீதா தேவி மீண்டும் இந்து மதத்திற்கு மாறி, மகாராஜா பிரதாப் சிங் ராவ் கெய்க்வாடை மணந்தார்.

“டிசம்பர் 26 மற்றும் 31க்கு இடையில், அவர் ஆர்ய சமாஜ் அமைப்பின் மூலம் இந்து மதத்திற்கு மாறி, பிரதாப் சிங்கை மணந்தார்” என்று மேனன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். (பக்கம் எண். 478-479).

‘Van Cleef and Arpels: Treasures and Legends’ என்ற புத்தகத்தில், அவர்களது திருமண தேதி டிசம்பர் 31 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொண்டாலும் அவர்களின் வாழ்க்கையில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. கெய்க்வாட் மாநிலத்தில், முதல் மனைவி உயிருடன் இருந்தால் இரண்டாவது திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கெய்க்வாட் அரசாங்கம் இருதார திருமணத்தைத் தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்தியது. இருப்பினும், பிரதாப் சிங் ராவ் தனது சொந்த மாநிலத்தின் இந்த சட்டத்திற்குக் கீழ்படிய மறுத்துவிட்டார், “இந்த சட்டம் அரசருக்கு பொருந்தாது” என்றார்.

குஜராத்தை சேர்ந்த வரலாற்றாசிரியர் ரிஸ்வான் காத்ரி, “மகாராஜா மும்பையில் திருமணம் செய்துகொண்டபோது மகாராணி சாந்தா தேவிக்கு என்ன நடந்திருக்கும் என்று ஜனவரி 3ஆம் தேதி சந்தேஷ் செய்தித்தாளில் செய்தி ஒன்று வெளிவந்தது.

மராத்தி பத்திரிக்கையில் வந்த வெளிவந்த ஓர் அறிக்கையை மேற்கோள் காட்டி சந்தேஷ் செய்தித்தாளில், “நான்கு மாதங்களுக்கு முன்புதான் மகாராணியும் அவரது குழந்தைகளும் மும்பை, முசோரிக்கு சென்றபோது மகாராஜா நீலகிரி காடுகளுக்கு யானைகளை வேட்டையாடச் சென்றார். அப்போதுதான் திருமணக் கனவுகள் தோன்றியிருக்க வேண்டும்,” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடந்த 1944 ஜனவரி 15ஆம் தேதி வெளியான வந்தேமாதரம் நாளிதழில் வெளியான செய்தியை ரிஸ்வான் காத்ரி மேற்கோள் காட்டி, @அப்போது பெண்கள் அமைப்புகளும் இந்த இரண்டாவது திருமணத்தை எதிர்த்தனர், மேலும் ஒரு சில பிரஜா மண்டல தலைவர்களும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். சட்டத்தை இயற்றுபவர் எப்படி சட்டத்தை மீற முடியும் என்ற கேள்வியை பிரஜாமண்டல் தலைவர்கள் எழுப்பினர்,” என்று கூறியது.

‘Van Cleef and Arpels: Treasures and Legends’ என்ற புத்தகம், “பிரிட்டிஷ் அதிகாரிகள் முதலில் பிரதாப் ராவின் இரண்டாவது திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தனர். ஆனால் பின்னர் அவர்களது ராஜ்ஜியத்தின் வாரிசு சாந்தா தேவியின் மகனாகவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்தத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும், ஆங்கிலேயர் சீதா தேவியை “மகாராணி” என்றழைக்க மறுத்தனர்” என்று குறிப்பிடுகிறது. (பக்கம் எண். 32)

அதே புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நாள் பிரதாப் சிங் சீதா தேவியை தனது நாசர்பாக் அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரச பொக்கிஷங்களைக் காட்டினார். உலகின் பல அரிய விலைமதிப்பற்ற ரத்தினங்கள், வைரங்கள், முத்துகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த அற்புதமான பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட கருவூலத்தில் வைக்கப்படுள்ள நகைகளைக் கண்டு சீதா தேவி ஆச்சரியப்பட்டார். (பக்கம் எண். 32)

  • பயணம் செய்வதும் ஷாப்பிங் செல்வதும் சீதா தேவிக்கு மிகவும் பிடிக்கும்
சீதா தேவி

பட மூலாதாரம்,HISTORYOFVADODARA.IN

எழுத்தாளர் லக்கி மூர் எழுதிய ‘மஹாரானிஸ்: மூன்று தலைமுறை இந்திய இளவரசிகளின் வாழ்க்கை மற்றும் காலங்கள்’ (‘Maharanese: Lives and Times of Three Generations of Indian Princesses’) என்ற புத்தகத்தில் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் மூன்றாவது பணக்கார அரசாக கெய்க்வாட் அரசாங்கம் இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (பக்கம் எண் 565)

‘வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ்: ட்ரெஷர் அண்ட் லெஜண்டஸ்’ (‘Van Cleef and Arpels: Treasures and Legends’) என்ற புத்தகத்தில், பிரதாபராவ் இந்தியாவின் இரண்டாவது பணக்கார மன்னராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

பிரதாப் சிங் ராவுக்கு பணத்துக்குp பஞ்சமேயில்லை. சீதா தேவிக்கு வெளிநாட்டுப் பயணம், விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது மற்றும் அரச விருந்துகள் ஆகியவை மிகவும் பிடிக்கும். விலையுயர்ந்த பொருட்களையே அவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும், சீதாதேவியின் வருகையால், அரச குடும்பத்தில் குழப்பம் அதிகரித்தது. பிரதாப் சிங் ராவின் முதல் மனைவி சாந்தா தேவியுடன் சீதா தேவிக்கு உடன்பாடில்லை என்று தகவல்கல் கூறுகின்றன.

கெய்க்வாட் குடும்பத்தைப் பற்றி ஆய்வு செய்த சந்திரசேகர் பாட்டீல், “இரண்டு ராணிகளும் தனித்தனியாக வாழ்ந்தனர், லட்சுமிவிலாஸ் அரண்மனையில் சாந்தா தேவியும், மகர்புராவில் கட்டப்பட்ட அரண்மனையில் சீதா தேவியும் தனித்தனியாக வாழ்ந்தனர்” என்று பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.

“சீதாதேவிக்கு வேட்டையாடுவதில் விருப்பம் இருந்தது, துப்பாக்கி சுடத் தெரியும், குதிரை சவாரி, விருந்தோம்பல் செய்வது பிடிக்கும். அவருக்கு பல ஐரோப்பிய மொழிகளும், ஆடை உலகு பற்றிய அறிவும் இருந்தது,” என்று ஜீதேந்திரசின் கெய்க்வாட் கூறீனார்.

கடந்த 1946இல் உலகப் போர் முடிவடைந்த நிலையில், பிரதாபராவ், சீதா தேவி ஆகியோர் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றனர். இருவரும் இரண்டு முறை அமெரிக்கா சென்று அதிக பணம் செலவழித்தனர். பெரும்பாலான நேரங்களில் சீதா தேவி ஆடம்பரமான பொருட்களை வாங்க நிறைய பணம் செலவழித்தார்.

மகாராஜாவிற்கு சொகுசு கார்கள் மீதும் விருப்பம் இருந்தது. சீதா தேவிக்காக மெர்சிடிஸ் நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெர்சிடிஸ் W126 கார் அவரிடம் இருந்தது. இருப்பினும், ஜீதேந்திரசிங் கெய்க்வாட் தனது வாதத்தில், வெளிநாட்டில் இருந்து நவீன யோசனைகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் போன்ற நல்ல விஷயங்கள் இந்தியாவுக்கு வருவதன் மூலம், மக்கள் பயனடைவதால்தான் அவர் வெளிநாடு சென்றதாகக் கூறுகிறார்.

  • வதோதரா கருவூலத்தில் இருந்து மாயமான விலைமதிப்பற்ற பொருட்கள்
சீதா தேவி
மகாராஜா பிரதாப் சிங் ராவ் கெய்க்வாட் அவரது லட்சுமி விலாஸ் அரண்மனையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் படம்.

பிரதாப் சிங், சீதா தேவியுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்வதற்காக அரசு கருவூலத்தில் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்துள்ளார். அவர் பிரிட்டன் நாட்டுக்கு அரச கருவூலத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் நகைகளை அனுப்பியது இந்திய அரசுக்குத் தெரிய வந்தது.

“ஆண்டுதோறும் அவர் பெறும் சம்பளம் 50 லட்சங்களைத் தவிர, பிரதாப் சிங் ராவ் 1943 முதல் 1947 வரை மாநில முதலீட்டு கையிருப்பான பிராஜனா நிதியிலிருந்து 6 கோடி ரூபாய் எடுத்துள்ளார். விலைமதிப்பற்ற வைரங்களால் செய்யப்பட்ட ஒரு வைர நெக்லஸ் மற்றும் இரண்டு முத்து கம்பளங்கள் உட்பட பல மதிப்புமிக்க பொருட்கள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டன என்று மேனன் குறிப்பிடுகிறார். (பக்கம் எண். 483)

இந்த விலைமதிப்பற்ற நகைகளில் பல சீதா தேவியிடம் இருந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. “வதோதராவில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை மகாராஜா வெளிநாடுகளுக்கு அனுப்பினார். அது நன்கு திட்டமிட்டு நீண்ட நாட்களாக நடந்து வந்தது,” என்று ரிஸ்வான் காத்ரி தெரிவித்தார்.

சுமார் 1.5 கோடி மதிப்பிலான புதிய நகைகளை வாங்கியதற்காக வதோதராவில் உள்ள ஜவஹர்கானாவின் கணக்குகளிலும் ஒரு பதிவு கிடைத்ததாக மேனன் குறிப்பிடுகிறார். இவற்றில் பல பொருட்களைக் காணவில்லை அல்லது புதிய நகைகளாகச் செய்யப்பட்டன. ஜவஹர்கானாவில் ஏராளமான சட்டவிரோத விலைமதிப்பற்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

முழு விவகாரத்தையும் ஆய்வு செய்ய இந்திய அரசு ஒரு சிறப்பு அதிகாரியை அனுப்பியது. ஆனால் பிரதாப் சிங் ராவ் அவர்களின் விசாரணைக்கு உதவவில்லை என்று மேனன் குறிப்பிடுகிறார்.

சந்திரசேகர் பாட்டீல் கூறுகையில், “இந்திய அரச குடும்பங்கள் தங்களது சிறப்பு பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததால் சோதனை ஏதும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தனர். எட்கர் டெகாஸ் மற்றும் பிக்காசோவின் ஓவியங்கள் உட்பட பல விலையுயர்ந்த ஓவியங்கள் சூட்கேஸ்களில் வைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகக் கருதப்படுகிறது.”

கெய்க்வாட் குடும்பத்தைச் சேர்ந்த ஜிதேந்திரசிங் கெய்க்வாட், ​​“அவர்கள் எதையும் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லவில்லை. அது அவருடைய சொத்து, அவர்களது தனிப்பட்ட விஷயம்,” என்று கூறினார்.

வதோதரா மற்றும் பிற மாநிலங்களில் அரசு கருவூலத்திற்குச் சொந்தமான பொருட்களைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பிறகு கருவூலத்திற்கே திருப்பித் தரும் நடைமுறை இருந்தது. ஆனால் இந்தப் பொருட்கள் அனைத்தும் காணாமல் போனது குறித்து இந்திய அரசு பிரதாப் சிங் ராவையே சந்தேகித்தது. இது தவிர, வதோதரா மாநிலத்தை இந்திய மாகாணத்துடன் இணைப்பதில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்திய அரசு அவர் மீது வருத்தம் தெரிவித்தது.

ஆனால், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதாப் சிங், தான் செய்த செலவுகளை திருப்பித் தருவதாக உறுதியளித்தார். இருந்தபோதிலும், இந்திய அரசு 1951ஆம் ஆண்டு 366(22) பிரிவின் கீழ் அவரை மகாராஜா பதவியில் இருந்து நீக்கி, அவருக்குப் பதிலாக அவரது மூத்த மகன் யுவராஜ் ஃபதேசிங்கிற்கு பரோடா மகாராஜாவாக நியமித்தது என்று மேனன் குறிப்பிடுகிறார். ஒருபுறம் பிரதாப் சிங்கின் அரியணை பறிபோக, மறுபுறம் சீதாதேவியின் பொழுதுபோக்குகள் அதிகரித்துக் கொண்டிருந்தன.

  • ஆடை அணிகலன்கள் மீதான ஆர்வம்
சீதா தேவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீதா தேவியின் பட்டுப் புடவைகள் மற்றும் நகைகளின் சேகரிப்பு ஆச்சரியமானதாகக் கருதப்படுகிறது மற்றும் அக்காலத்து ஃபேஷன் உலகில் பேசப்பட்டது.

ஜீதேந்திரசிங் கெய்க்வாட் பிபிசி குஜராத்தி உடனான உரையாடலில், மகாராணி சீதா தேவி இந்தியாவின் வில்லிஸ் சிம்ப்சன் என்று அழைக்கப்பட்டார். வில்லிஸ் சிம்ப்சன், ஒரு அமெரிக்க சமூகவாதி ஆவார், அவர் இங்கிலாந்தின் மன்னர் எட்டாவது எட்வர்-ஐ காதலித்தார். வில்லிஸ் சிம்ப்சனுக்கு முன்னதாகவே நடந்த இரண்டு திருமணங்கள் முறிந்துவிட்டதால் அவரது கணவர்கள் இருவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதால், ‘பழமைவாத பிரிட்டிஷ் சமூகம்’ (‘conservative British society’) அவரை ஏற்கத் தயாராக இல்லாததால், மன்னர் எட்டாவது எட்வர்ட் சிம்ப்சனை திருமணம் செய்து கொள்ள பதவியைத் துறக்க வேண்டியிருந்தது

வாலிஸ் சிம்ப்சனை மணந்த பிறகு, எட்டாவது எட்வர்ட் விண்ட்சரின் கோமகன் (Duke) ஆனார் மற்றும் வாலிஸ் சிம்ப்சன் விண்ட்சரின் சீமாட்டி (Duchess)ஆனார்,” என்று அவர் கூறுகிறார்.

வாலிஸ் சிம்சன் மற்றும் சீதா தேவியின் கதைகள் ஒரே மாதிரியாக இருந்ததால், சீதா தேவியை இந்திய வாலிஸ் சிம்சன் என்றும் அழைத்தனர். சீதா தேவியின் ரூபி, வைர மற்றும் முத்து நகைகளின் தொகுப்பு ஆச்சரியமாக இருந்தது. இந்த விலைமதிப்பற்ற கல்லின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் பாரிசில் உலகப் புகழ்பெற்ற நகைகள் மற்றும் ஃபேஷன் பிராண்டான வெயில் ரீஃப் & ஆர்பெல்ஸிற்காக(Veil Reif & Arpels) பல நகைகள் மற்றும் நெக்லஸ்களை வடிவமைத்துள்ளார்.

நூற்றுக்கணக்கான விலையுயர்ந்த புடவைகள், பர்ஸ்கள், பைகள், காலணிகள் மற்றும் நகைகளைச் சேகரித்து வைத்திருந்தார். அவரது அலமாரியில் ஹாரி வின்ஸ்டன், கார்டியர் போன்ற பிரபலமான நிறுவனங்களின் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது.

கடந்த 1949இல் சீதா தேவி 78.5 காரட் இங்லிஷ் டிரெஸ்டன் (English Dresden) வைர நெக்லஸ் அணிந்திருந்த படங்கள் பிரபலமாகின. அவர் ஒருமுறை நல்ல அதிர்ஷ்டம் பெறவேண்டி தனது 30 காரட் நீலக்கல்லை (6.0 கிராம்) தொடுவதற்காக விருந்தினர்களை அழைத்தார். ஆடை அணிகலன்கள் மீதான அவரது காதல் மேற்கத்திய ஃபேஷன் பத்திரிகைகளில் அடிக்கடி விவாதிக்கப்பட்டது.

  • அவரது நகைகள் விலைமதிப்பற்றதா?
சீதா தேவி
சீதாதேவி (இடது) ஜெர்மன் நடிகர் கர்ட் ஹெர்ஜென்ஸ் மற்றும் அவரது மனைவியுடன் 1969இல் ஒரு திரைப்பட திரையிடலின்போது எடுத்த புகைப்படம்.

‘வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ்: ட்ரெஷர் அண்ட் லெஜண்டஸ்’ என்ற புத்தகத்தில் சீதாதேவியிடம் ஒரு முத்து நெக்லஸ் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 34, 36 மற்றும் 40 முத்துகள் இருந்தன. அவை செங்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அரிய வகை பாஸ்ரா முத்துகள். இந்த முத்து நெக்லஸின் மதிப்பு 599,200 டாலர்கள். 50,400 டாலர்கள் மதிப்புள்ள இரண்டு நெக்லஸ்களும் அவரிடம் இருந்தன.

அவரது தொகுப்பில் 42,000 டாலர்கள் மதிப்புள்ள இரண்டு கருப்பு முத்து நெக்லஸ்கள் இருந்தன. 33,600 டாலர்கள் மதிப்புள்ள விலைமதிப்பற்ற ஒரு முத்து மோதிரமும் இருந்தது. இது தவிர, உலகப் புகழ்பெற்ற முத்து கம்பளமும் அவரிடம் இருந்தது. இந்தக் கம்பளம் வதோதராவின் மகாராஜா கந்தேராவ் கெய்க்வாட் என்பவரால் செய்யப்பட்டது.

சந்திரசேகர் பாட்டீல், “மகாராஜா கந்தேராவுக்கு மகன்கள் இல்லை, எனவே மதீனாவில் உள்ள முகமது நபியின் மசூதியின் மீது சாதர் துணி விரித்தால் உங்களுக்கு ஒரு மகன் பிறப்பார் என்று சில மௌலவிகள் அவருக்கு அறிவுறுத்தினர். எனவே கந்தேரா எண்ணற்ற முத்துகளால் ஆன கம்பளத்தை உருவாக்கினார். இருப்பினும், அதற்குள் அவர் இறந்துவிட்டதால் அது மதீனாவை அடையவில்லை. அந்த முத்து கம்பளம் விலைமதிப்பற்றது. அது 8 அடி நீளம் இருந்தது. அதில் வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்களான மாணிக்கம், புஷ்பராகம் ஆகியவற்றுடன் எண்ணற்ற முத்துகள் இருந்தன. அக்காலகட்டத்தில் அந்த முத்து கம்பளத்தின் மதிப்பு 5 மில்லியன் யூரோக்கள் ஆக இருந்தது.” (பக்க எண். 48)

சீதா தேவியிடம் இருந்து தோஹாவில் உள்ள கத்தார் தேசிய அருங்காட்சியகத்திற்கு இந்தக் கம்பளம் எப்போது, ​​எப்படி வந்தது என்பது பற்றி பல கதைகள் உள்ளன. இந்த முத்து கம்பளம் இப்போது கத்தார் தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்பதுதான் இந்த அனைத்து கதைகளில் இருக்கும் உண்மை. சீதா தேவியின் மரணத்திற்குப் பிறகு, ஜெனிவாவில் உள்ள ஒரு லாக்கரில் இந்த முத்து கம்பளம் கண்டெடுக்கப்பட்டது. இது 1994இல் விற்கப்பட்டபோது, ​​அதன் விலை $31 மில்லியன் ஆகும்.

தெற்கு வைரத்தின் நட்சத்திரம் மற்றும் பிற வைர நகைகள் ஆம்ஸ்டர்டாமில் சில நகைக் கடைகளிடம் கண்டுபிடிக்கப்பட்டன.

சீதா தேவி
1865ஆம் ஆண்டு வதோதராவின் மன்னர் கந்தேராவ் கெய்க்வாட் உருவாக்கிய முத்து கம்பளம். இதில் 13 லட்சம் முத்துகள் உள்ளன. இதன் விலை பல கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்த முத்து கம்பளம் கத்தார் தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

சீதா தேவியிடம் தங்கம்-வெள்ளி பூசப்பட்ட பாத்திரமும் இருந்ததாக தகவல்கள் இருகின்றன. ‘வான் க்ளீஃப் & ஆர்பெல்ஸ்: ட்ரெஷர்ஸ் அண்ட் லெஜெண்ட்ஸ்’ புத்தகத்தின்படி, அவர் ஒரு காலத்தில் வைத்திருந்த ஒரு தாமரை மலர் நெக்லஸ் 2009இல் 2 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டது. (பக்கம் எண். 25,26)

பாரிசியன் ஃபேஷன் பிராண்டான வான் க்ளீஃப் & ஆர்பெல்ஸின் இணையதளத்தின்படி , “கேளிக்கை மற்றும் உல்லாசத்திற்கான அவரது ரசனை, நகைகள் மீதான ஈர்ப்பு மற்றும் ஆவேசம் காரணமாக அவர் ‘இந்தியன் வாலிஸ் சிம்ப்சன்’ என்று அழைக்கப்பட்டார்.”

“பாரம்பரிய ஆடைகளை நவீனமயமாக்குவதில் அவரது செயல்பாடு மேற்கத்திய நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அவர் பிரான்சின் பாரிஸில் குடியேறுவதற்கு முன்பு ஸ்வீட் அண்ட் வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ் துணிக் கடைகளுக்கு அடிக்கடி சென்று, அங்கு அவருக்கென சொந்தமான பிரத்யேக சர்வதேச வட்டத்தை உருவாக்கினார்.”

“அவர் பல ஃபேஷன் பொருட்களை உருவாக்க ஜாக் ஆர்பெல்ஸை நியமித்தார். அவர் உருவாக்கிய ‘இந்து ஹார்’ ஓர் அற்புதமான படைப்பு. இது வதோதராவின் அரச கருவூலத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற கற்களால் ஆனது மற்றும் 150 காரட்டுகளுக்கு மேல் எடையுள்ள 13 கொலம்பிய மரகதங்கள் பதிக்கப்பட்டது.”

“இது தாமரை போன்ற வடிவத்தில் இருந்தது. அதன் இலை மற்றும் மலர் இதழ்களின் அசைவுகள் இயற்கையின் துடிப்பைக் குறிக்கின்றன.”

வைரம் மற்றும் மோந்தி நகைகளின் மோகத்தால், அவர் அக்காலத்தின் பாரிஸ் ராணியாகவும் கருதப்பட்டார். ஜிதேந்திர சிங் கெய்க்வாட், சீதா தேவி வைரங்களை பரிசோதிப்பவராகவும் அதில் அறிவாளியாகவும் இருந்தார். நகைகள் மற்றும் அதன் வடிவமைப்பு பற்றிய புரிதலும் அவருக்கு இருந்தது என்று அவர் கூறினார்.

சீதா தேவியின் நகைகள்
சீதாதேவியின் இந்த ‘இந்து நெக்லஸ்’ வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அதில் 150 காரட் கொண்ட 13 கொலம்பிய மரகதங்களும், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வைரங்களுடன் மையத்தில் தாமரை வடிவமும் இருந்தன. சீதா தேவி 1950ஆம் ஆண்டு இந்த நெக்லஸை செய்ய ஆணையிட்டார்.

சீதாதேவியும் பிரதாப் சிங் ராவும் பிரிந்தனர்

சீதா தேவி
சீதா தேவி விலை உயர்ந்த ‘ஹவானா’ சுருட்டுகளை புகைத்தார்

பிரதாபராவ் மற்றும் சீதாதேவி ஐரோப்பாவில் தங்கியிருந்தனர். முதலில் பிரான்ஸின் மொனாக்கோவிற்கு அருகில் உள்ள மான்டே கார்லோவில் ஒரு மாளிகையை வாங்கினார். இத்தம்பதி இங்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதுதான் அந்தக் காலத்தில் சீதாதேவியின் நிரந்தர முகவரி. பிரதாபரவா வதோதராவில் இருந்த பொக்கிஷங்களுள் சில விலைமதிப்பற்ற பொருட்களை இங்கு இடம் மாற்றியதாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு சீதாதேவி பாரிஸிலும் ஒரு வீட்டை வாங்கினார்.

Van Cleef & Arpels : treasures and legends என்ற புத்தகத்தில், மிலன் வான்செட் மகாராணி சீதாதேவி பற்றிய முழு அத்தியாயத்தையும் எழுதியுள்ளார். அதில், சீதாதேவியும், பிரதாப் சிங்கும் அமெரிக்க பயணத்தின்போது 10 மில்லியன் டாலர்களை செலவிட்டதாக எழுதியுள்ளார்.(பக்கம் எண் 15)

மார்ச் 8, 1945இல் அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். பிரதாப் சிங் ராவ் தனது தாத்தாவின் நினைவாக அவருக்கு சாயாஜிராவ் என்று பெயரிட்டார். அவனுடைய அழகான பெயர் பிரின்சி. வரலாறு அவரை ஆறாவது சாயாஜிராவ் என்று அழைக்கிறது. ஆனால் இருவரும் பிரிந்ததால் இருவருக்கும் இடையே ஆபத்து அதிகரிக்கத் தொடங்கியது. அவரது மகன் பிரின்சி சீதாதேவியுடன் இருந்தார்.

பிரதாப் சிங் ராவிடம் இருந்து பிரிந்தாலும், மகாராணி என்ற பட்டத்தைத் தொடர்ந்து வைத்திருந்தார். அவர் வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் வதோதரா அரச குடும்பத்தின் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. சந்திரசேகர் பாட்டீல், “சீதாதேவி செலவழிப்பவர், பாப்கோவும் அப்படித்தான். அவரது செலவுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. அவர் தனது பொழுதுபோக்கிற்காக நிறைய பணம் செலவழித்தார், இது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது மற்றும் 1956இல் அவர்களின் விவாகரத்துக்கு வழிவகுத்தது,” என்று அவர் கூறினார்.

ஜிதேந்திர சிங் கெய்க்வாட், “மகராஜ் பிரதாப் சிங் ராவ் பிரிட்டனில் ஒரு குதிரைப் பண்ணையைக் கட்டினார். அதில் குதிரைகள் வித்தியாசமாக இருந்தன. சீதா தேவியுடனான விவாகரத்துக்குப் பிறகு, அவர் அங்கேயே தங்கி 1968இல் இறந்தார்,” என்று கூறினார்.

  • வாலிஸ் சிம்சனுடன் சீதா தேவியின் தகராறு
சீதா தேவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரதாப் சிங் ராவிடமிருந்து விவாகரத்துக்குப் பிறகு, சீதாதேவி பல மதிப்புமிக்க பொருட்களை விற்றார். சந்திரசேகர் பாட்டீல், “தன்னை இயக்குவதற்கே அவருக்குப் பணம் தேவைப்பட்டது. அவரது வாழ்க்கை முறை மிகவும் விலை உயர்ந்தது. எனவே அவர் சில மதிப்புமிக்க பொருட்களை விற்றே தேவையைப் பூர்த்தி செய்தார்,” என்று தெரிவித்தார்.

வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ்: ட்ரெஷர் அண்ட் லெஜண்டஸ் புத்தகத்தில் ஒரு நிகழ்வில், சீதா தேவிக்கும், விண்ட்சர் சீமாட்டியான வாலிஸ் சிம்ப்சனுக்கும் இடையே ஒரு பார்ட்டியில் நகை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. சீதா தேவி வில்லிஸ் சிம்ப்சன் அணிந்திருந்த ஒரு நகைப் பெட்டியைப் பார்த்து, அது தன் காலுக்குத்தான் ஏற்றது என்று குறைவாகக் கூறினார்.

உண்மையில், அவர் ஹிராஜ்தித் நூபூரை விற்ற நகைக் கடைக்காரர் இந்த நகை வடிவமைப்பை மாற்றி புதிய வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்களைச் சேர்த்து இந்த நெக்லஸ் செட் செய்தார் என்றே நம்பினார். அவர் அதை வின்ட்ஸர் சீமாட்டிக்கு விற்றார். (பக்கம் எண். 42)

சீதா தேவியின் இந்தக் கருத்து வில்லிஸ் சிம்சனை கோபப்படுத்தியது. ஆனால், இந்த நகையை யாரிடமோ இருந்து எடுத்ததாகக் கூறியஅந்த அமெரிக்க நகைக்கடை வியாபாரி ஹாரி வின்ஸ்டன், சீதா தேவியின் நூபூரில் இருந்து தான் இந்த நகையை செய்ததாகக் கூறுவதை மறுத்துள்ளார். ஆனால் வில்லிஸ் சிம்ப்சன் இச்சந்தர்ப்பத்தால் அவமானப்பட்டதாக உணர்ந்து நகைகளை ஹாரி வின்ஸ்டனிடம் திருப்பிக் கொடுத்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, வில்லிஸ் சிம்ப்சனும் சீதாதேவியும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டுப் பேசவே இல்லை. இந்த நிகழ்வுக்கு முன், இருவரும் மேற்கத்திய ஃபேஷன், ராயல் மற்றும் செல்வந்தர்களால் நடத்தப்பட்ட கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளில் அடிக்கடி ஒன்றாகக் காணப்பட்டனர்.(பக்கம் எண். 42)

புகைபிடிப்பதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. அவர் உலகின் மிக விலையுயர்ந்த சிகரெட் மற்றும் சுருட்டுகளை புகைத்தார். ஹவானா சுருட்டுகள் அவருக்கு மிகவும் பிடித்தவை, மேலும் அவரது சிகரெட் வைத்திருக்கும் பெட்டிகூட மாணிக்கங்களால் பதிக்கப்பட்டிருந்தது.

அவரது விலைமதிப்பற்ற சிகரெட் பெட்டியை வீல் க்ளீஃப் & ஆர்பெல்ஸ் வடிவமைத்தது. தங்க முலாம் பூசப்பட்ட நாக்கை சுத்தம் செய்யும் கருவியை உருவாக்க அவர் வீல் க்ளீஃப் & ஆர்பெல்ஸை நியமித்தார். Van Cleef & Arpels: treasures and legends என்ற புத்தகத்தில், அவரது முயற்சியால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக வதோதராவில் இருந்து பாரிஸ் சென்றபோது ‘சில அடிமைகள் அவரது மாளிகையில் இரவு முழுவதும் நடன விருந்து நடத்தினர் ‘ என்பது போன்ற மகாராணி சீதா தேவியைப் பற்றி சில வதந்திகள் அதில் வந்தன.

ஆஷா என்ற இந்திய மதுபானத்தில்தான் அவர்களின் அழகு, புத்துணர்ச்சியின் ரகசியம் மறைந்திருப்பதாகவும் சில வதந்திகள் இருந்தன. மயில், மான் ரத்தம், பொன், முத்துப்பொடி, குங்குமம், தேன் ஆகியவற்றை எடுத்து ஆற்றங்கரையில் நீண்ட நேரம் புளிக்க வைத்து இந்த மதுபானம் தயாரிக்கப்படுகிறது.’

‘இந்த மதுபானத்தைப் பரிமாறுவதற்காக விலைமதிப்பற்ற கற்கள் பதித்த பறவை வடிவில் ஒரு தங்கக் கிண்ணத்தையும் மகாராணி வைத்திருந்தார்.'(பக்கம் எண். 25-26)

பிரான்ஸ் இரண்டாம் உலகப்போரில் இருந்து வெளிவரப் போராடியபோது, ​​சீதா தேவி பாரிஸில் உள்ள உயர் சமூகத்தின் முக்கிய நபர் ஆனார். ஒருமுறை அமெரிக்காவுக்கு பயணிக்கவிருந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் அவரது கணவரிடம் இருந்து அழைப்பு வராததால் அமெரிக்காவில் இருந்து பிரிட்டன் வந்து கணவருடன் போனில் பேசிவிட்டு அமெரிக்கா திரும்பியவர் என்பதும் ஒன்று. அவரைப் பற்றிய இத்தகைய ஆதாரமற்ற கதைகள் பரவலாகப் பேசப்பட்டன. இருப்பினும், எந்த ஆதாரமும் இல்லாத இதுபோன்ற கதைகள் அவருக்கு நற்பெயரை அளிக்கவில்லை.

ஜிதேந்திரசிங் கெய்க்வாட், “அவரைப் பற்றி நிறைய எதிர்மறையான கருத்துகள் வந்துள்ளன. ஆனால் அவர் அவ்வாறு இல்லை. அவர் நன்றாகப் படித்தவர். அவர் ஒரு ஃபேஷன் சின்னம். அவர் ஒரு கம்பீரமான பெண். முழு மரியாதை மற்றும் நிகரற்ற அழகுடன் இருந்தார். புத்திசாலித்தனம் மற்றும் கண்ணியம் அவரது வாழ்வில் இருந்தது.”

  • சீதாதேவி தன் மகனின் மரணத்தால் அதிர்ச்சியடைந்தார்
சீதா தேவி
1959இல் ஹாம்பர்க்கில் நடந்த டெர்பி டே ரேஸ் நிகழ்வில் கலந்து கொண்ட சீதா தேவி

மகன் பிரின்ஸ் வளர்ந்து கொண்டிருந்தான். வைரங்கள் மற்றும் முத்துகள் தவிர, அவருக்கு மற்றொரு காதல் இருந்தது, அந்த காதல் அவரது மகன் பிரின்ஸ் ஆறாவது சாயாஜிராவ் கெய்க்வாட். 1960இல், சீதா தேவியும் அவரது மகனும் வான் க்ளீஃப் & ஆர்பெல்ஸ் நடத்திய விருந்தில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில், ஆறாவது சாயாஜிராவ் நினைவாக, பியர் ஆர்பெல்ஸ் என்பவரால் வைரத்திற்கு பிரின்சி என்று பெயரிடப்பட்டது.

அவரது விலையுயர்ந்த வாழ்க்கை முறையால், அவருக்கு பணம் இல்லாமல் போனது. இதன் காரணமாக, அவர் 1974 இல் தனது நகை தொகுப்பில் இருந்து சிலவற்றை ஏலம்விட்டார்.

சந்திரசேகர் பாட்டீல், சீதாதேவியின் மகனைப் பற்றிய தகவல்களைக் கூறும்போது, ​​”பிரின்சிற்கு இசையில் ஆர்வம் அதிகம். ஜாஸ் இசையில் நன்கு புலமை பெற்றவர். ஆனால் அவரது தாயைப் போலவே, பெயர், புகழுக்கு அடிமையான அவர், மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி, 40 வயதில் 1985இல் தற்கொலை செய்துகொண்டார்.”

சீதாதேவி தனது மகனின் திடீர் மரணத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தார். அவர் தனிமையாக உணர்ந்தார். இதற்கு மேல் அவரால் பல ஆண்டுகள் வாழ முடியவில்லை. 1989ஆம் ஆண்டு தனது மகன் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.

அவர் இறந்த பிறகு, வதோதராவின் அரச கருவூலத்தில் இருந்து சில விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜெனிவாவில் உள்ள லாக்கரில் முத்து கம்பளம் கண்டெடுக்கப்பட்டது.

இவ்வாறு, பணம், வசதிகள், ஆடம்பர வாழ்க்கை என அனைத்த்ஹம் இருந்த போதிலும் பிரச்னைகள் நிறைந்த வாழ்வையே வாழ்ந்து சீதா தேவி கடைசியில் தனிமையில் இறந்தார்.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *