பன்னிப்பிட்டியில் மதுஷ் குழு கொள்ளையிட்ட 700 கோடி ரூபா இரத்தினக்கல் டுபாய் பொலிஸிடம் சிக்கியது!

மாக்கந்துர மதுஷ் இலங்கையில் இருந்து தனது சகாக்கள் மூலம் கடத்திச் சென்ற இரத்தினக்கல் இப்போது டுபாய் பொலிஸாரின் வசம் இருப்பதாக ஒரு தகவல் சொல்கின்றது.

அதேசமயம் இந்தக் கடத்தலுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

700 கோடி ரூபா இரத்தினக்கல்லை பன்னிப்பிட்டியில் கொள்ளையிட்ட மதுஷ் அந்தக் கொள்ளையை நவீன தொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்தியே மேற்கொண்டிருப்பதை அறிந்து பொலிஸாரே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

700 கோடி ரூபா பெறுமதியான கொள்ளை என்பதால் இது பிசகிவிடக் கூடாது என்பது ஒரு பக்கம் – கொள்ளையிட்ட பின் தகவல்கள் வெளியே செல்லக் கூடாதென்பது இன்னொரு பக்கம் – அப்படியே சென்றாலும் தனது சகாக்கள் யாரும் சிக்கிவிடக் கூடாதென்பது இன்னொரு பக்கம்…

இப்படி பல பக்கங்களை யோசித்த மதுஷ் – கணினித்துறையில் ஆற்றல் மிக்க ஒருவரைக் கொண்டு இதற்கென ஒரு மொபைல் செயலியை (app )வடிவமைத்துள்ளார். அந்தச் செயலியின் ஊடாகவே இது திட்டமிடப்பட்டு – ஒருங்கிணைக்கப்பட்டு – ஒருவருவருக்கொருவர் தொடர்புகொள்ளப்பட்டு – இந்தக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளது.

அந்தச் செயலியை தயாரித்தவர் இப்போது சிக்கியுள்ளார். இப்படி தொழிநுட்ப உதவி – யுக்தியுடன் ஏற்கனவே வேறு பல விடயங்களையும் இவர்கள் அரங்கேற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இப்படி கொள்ளையடிக்கப்பட்ட அந்த இரத்தினக்கல் பின்னர் ஒரு நபரால் நடிகர் ரயன் மற்றும் பாடகர் அமல் ஆகியோரிடம் தெமட்டகொடை சமந்தா தியேட்டருக்கு அருகில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் கல்லை வழங்க பியகமவில் இருந்து ஒரு வாகனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டு வந்திருப்பதும் அன்று மாலையே ரயன் – அமல் – மற்றும் ஒரு கொழும்பு வர்த்தகர் இசைநிகழ்ச்சி ஒன்றுக்காக டுபாய் சென்றதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரத்தினக்கல் கடத்தலுக்காகவே டுபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார் மதுஷ். அதில் கலந்துகொள்ளும் போர்வையில் சென்ற மேற்படி முக்கியஸ்தர்களே இதனைக் கொண்டு சென்றுள்ளனர். அதுவும் சுங்க அதிகாரி ஒருவரின் சப்போர்ட்டுடன்…

ரயன் மற்றும் அமல் மதுஷுடனான தொடர்புகளை ஆரம்பத்தில் மறுத்தனர். ஆனால், இப்போது நிலைமை வேறு. அவர்கள் சிக்கிக் கொண்டது ஒருபுறம். மறுபுறம் அவர்களின் கைத்தொலைபேசி அன்றைய தினம் தெமட்டகொடையில் இருந்து கட்டுநாயக்க வரை பயன்பாட்டில் இருந்துள்ளதை விசாரணை செய்யும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஊர் பாஷையில் சொல்வதானால் இவர்களுக்கு இனி கேஸ் பாரம் தான்.

இவற்றை விட இன்னுமொரு முக்கிய விடயம்… இந்தச் சம்பவம் தொடர்பில் இரத்தினக்கல் உரிமையாளர் பொலிஸ் சென்ற பின்னர் டுபாயில் இருந்து மதுஷ் அவருடன் மூன்று தடவைகள் போனில் பேசியுள்ளார்.

“ரொம்பத் துள்ள வேண்டாம். என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. 1300 கோடி ரூபாவுக்கு அதனை விற்க நான் பேசியுள்ளேன். அப்படி விற்றால் உன்னை கவனிக்கின்றேன். இத்தோடு தேடுவதை நிறுத்திக்கொள்” என்று மதுஷ் தொலைபேசியில் இரத்தினக்கல் உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுஷ் தேடப்பட்டார்

மாக்கந்துர மதுஷ் இலங்கை பாதுகாப்புத் தரப்பினருக்கு அப்பால் பாகிஸ்தானின் மாஃபியா கும்பலால் கொல்வதற்குத் தேடப்பட்டவர் என்பது விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கொடுக்கல் வாங்கலால் மதுஸுடன் கோபமடைந்திருந்த பாகிஸ்தான் தரப்பு கஸ்டமர் என்ற ரீதியில் இருவரை மதுஷுடன் தொடர்புகொள்ள வைத்து டுபாய்க்கும் அனுப்பியிருந்தது. அவர்கள் மதுஷை தீர்த்துக்கட்டி திரும்ப பாகிஸ்தான் வர விசேட படகுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தது பாகிஸ்தான் ரீம்.

கடந்த சில மாதங்களாக மதுஷ் மிகுந்த பாதுகாப்புடன் இருந்ததாலும் வெளிப்பயணங்களைத் தவிர்த்த காரணத்தினாலும் அவர்களின் நோக்கம் கைகூடவில்லை. பொலிஸில் மதுஷ் மாட்டிய கையோடு இப்போது பொலிஸில் அவர்களை மேலும் இறுக்க பாகிஸ்தான் ரீம் வேலைகளை செய்து வருவதாகத் தகவல்.

மதுஷின் சகாக்கள் கைது

இப்போது இலங்கையில் மதுஷின் சகாக்கள் கைது நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது. நேற்றும் கூட இருவர் கைது செய்யப்பட்டனர். கஞ்சிப்பான இம்ரானின் இடத்தை நிரப்பி அவரின் வேலைகளை முன்னெடுக்க முயன்றபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் சொல்கின்றது.

அதேசமயம் களுத்துறை சிறைச்சாலை பஸ் தாக்குதலை நடத்திவிட்டு படகில் இந்தியா தப்பிச் சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் டுபாய் செல்ல முற்பட்ட அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகியோர் இந்தியப் பொலிஸ் பிடியில் இருந்து தப்ப தமிழக அரசியல்வாதிகளின் உதவியைப் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

தமிழக அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவரின் உதவியின் ஊடாகவே மதுஷ் குழு இந்த வேலையை செய்துள்ளதாகவும், இங்கிருந்து தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள பாதாள உலக கோஷ்டி பிரமுகர்கள் இதில் ஒத்தாசைகளை வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடக்கின்றன.

இவற்றைவிட நவீன ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்ப மதுஷ் முயன்றதாக வந்த தகவல்கள் குறித்து நேற்று குறிப்பிட்டிருந்தேன். கடல் மூலம் சுமார் ஐந்து இடங்களில் கைமாற்றி இந்த ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் பல தகவல்கள் புதிதாகத் கிடைத்தால் தொடர்ந்து பகிர்வேன்.

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *