நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சால் இந்தியாவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்!

நபிகள் நாயகம் குறித்ததான சர்ச்சை கருத்து, இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் எதிரொலித்துள்ள நிலையில் அதன் பின்னணியை விரிவாக பார்ப்போம்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை இகழும் வகையில் பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டலும் நபிகள் நாயகத்துக்கு எதிராக ட்வீட் செய்தார். அது அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் அந்த ட்வீட்டை அழித்து விட்டார். இருவரதும் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதன் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது. இதனிடையே பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தையும் அவமதிப்பதை ஏற்க முடியாது எனும் பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது.  இவ்விவகாரம் அரபு நாடுகளிலும் எதிரொலித்தது. ஈரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இந்த கருத்துக்களுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ள நிலையில் அதன் பின்னணியை விரிவாக பார்ப்போம்.

சவுதி அரேபியா கண்டனம்: நுபுர் சர்மாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சவுதி அரேபியா, சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் அந்நாடு வரவேற்றுள்ளது. சவுதி அரேபியா அனைத்து நம்பிக்கை மற்றும் மதங்களுக்கு மரியாதை அளிக்க வலியுறுத்துகிறது என்றும் இஸ்லாமியச் சின்னங்கள் மற்றும் அனைத்து மதங்களின் முக்கிய பிரமுகர்களை அவமதிக்கும் செயல்களை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய தூதர் விளக்கம்: நபிகள் நாயகம் குறித்த அவதூறு கருத்துக்கள் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய தூதர் தீபக் மிட்டல், “இந்த கருத்துக்களுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்களின் கலாசாரத்தின்படியும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின் படியும் இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது” எனக் கூறியதோடு ஏற்கனவே தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்திய தூதருக்கு சம்மன்: கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரை அழைத்து பேசி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “இப்படி இஸ்லாமியத்துக்கு எதிரான பேச்சுக்களை எந்தவித தண்டனையும் இல்லாமல் அப்படியே விடுவது மனித உரிமைகளுக்கு ஆபத்தாக அமைவதோடு, பாரபட்சத்திற்கு வழிவகுக்கும், அது வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கத்தாரை தொடர்ந்து குவைத், ஈரான் ஆகிய நாடுகளும் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

வெங்கையா நாயுடு: இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கத்தார் உட்பட அரபு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கண்டனம் தெரிவித்துள்ளது கத்தார் நாட்டு அரசு.

நுபுர் சர்மா மன்னிப்பு: பாஜகவின் அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் இருவரும் தங்களுடைய கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நுபுர் சர்மா கூறுகையில், “சிவபெருமானை மீண்டும் மீண்டும் திட்டுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, ஆத்திரத்தில் சில விஷயங்களைச் சொன்னேன். எனது வார்த்தைகள் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நவீன்குமார் ஜிண்டால் விளக்கம்: தான் பேசிய கருத்துக் குறித்து விளக்கமளித்துள்ள நவீன்குமார் ஜிண்டால், ”அனைத்து மதங்களின் நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்கள் தெய்வங்கள் மீது அநாகரீகமான கருத்துக்களைப் பரப்புபவர்களிடம் மட்டுமே நான் அந்த கேள்வியை கேட்டேன். நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல” என்றார். மேலும் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக நவீன் ஜிண்டால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கண்டனம்: பாஜக பிரதிநிதிகள் முகமது நபிகளுக்கு எதிராக தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

காங்கிரஸ் விமர்சனம்: பாஜகவின் நடவடிக்கை நாட்டை ஏமாற்றும் முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், பாஜக கருத்து அப்பட்டமான போலியான பாசாங்கு என்றும், இது வெளிப்படையான கேலிக்கூத்து என்றும் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு மத வன்முறை, பிளவுபடுத்தும் பழமைவாதம் மற்றும் வாக்கு வங்கி அரசியலைப் பாதுகாப்பதற்காக வெறுப்பை வளர்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *