ரணிலால் ஒன்றும் செய்ய முடியாது ரத்ன தேரர் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பெற்ற எந்தவொரு நாடும் சுபீட்சமடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ரணிலாலும் எதுவும் செய்ய முடியவில்லை
மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதார நிலைமை நெருக்கடிக்குள்ளாகத் தொடங்கியதும் சிலர் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும், உலக வங்கியிடம் செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தினர்.

இன்னும் சிலர் ரணில் பிரதமராக வந்த போது அவரால் இந்தப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்க முடியும் என்று குறிப்பிட்டனர்.

அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நாங்களும் ஒதுங்கி நின்று அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தோம்.

ஆனால் அவர்களினால் எதுவும் முடியாது என்பது தற்போது புலனாகியுள்ளது. சுருக்கமாகச் சொல்வதானால் பொதுமக்கள் வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நாடும் முன்னேறவில்லை
அத்துடன் இந்த உலகம் ஒன்றும் அட்சய பாத்திரம் கிடையாது. அள்ளி அள்ளி யாரும் தரவும் மாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்ற எந்தவொரு நாடும் முன்னேற்றமடைந்தது கிடையாது.

அதற்குப் பதிலாக இன்னுமின்னும் அடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டது தான் மிச்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *