உயிரிழந்த இந்திய முப்படை தளபதியின் அந்த கடைசி நிமிடங்கள்!

இந்தியாவில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான நிலையில், அதிலிருந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தை கடைசியாக உயிருடன் பார்த்ததாகவும், அவர் பேசியதை கேட்டதாகவும் உள்ளூர் தொழிலாளி ஒருவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், பாதுகாப்புப் படைத் தலைவர் (Chief of Defence Staff) ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார், அவர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மதியம் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, ​​அதன் அருகே சிவக்குமார் என்பவர் சென்றதாகவும், எரிந்துகொண்டிருந்த ஹெலிகாபிடரில் இருந்த மூன்று பேர் வெளியே வந்ததாகவும் கூறியுள்ளார்.

குன்னூர் டவுனில் வசிக்கும் கட்டிட ஒப்பந்ததாரரான சிவக்குமார், தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தனது மைத்துனரை பார்க்க வந்துள்ளார்.

அவர் கூறுகையில், “பக்கத்தில் ஒரு ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக எனது மைத்துனர் கூறினார். நான்காம் பக்கத்தில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு சென்றோம். அங்கு ஹெலிகாப்டர் இரண்டாகப் பிளந்து தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.

20 அடி உயரத்திற்கு நெருப்பு எரிந்ததால் எங்களால் அருகில் செல்ல முடியவில்லை. நாங்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தோம். அதன்பிறகு, யாரேனும் உயிருடன் இருந்தால் காப்பாற்றலாம் என அருகில் சென்றோம், அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மூன்று பேர் வெளியே வந்து விழுந்து கிடந்தனர்.

எங்கள் எல்லோராலும் விபத்து பகுதிக்கு செல்ல முடியவில்லை. நான் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்றவன் என்பதால், நான் மட்டும் சென்று பார்த்தேன். முன்று பெரும் தீக்காயங்களுடன் உயிரோடு இருந்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரை நாங்கள் வெளியே எடுத்தோம். அவர் என்னிடம் தண்ணீர் கேட்டார். விபத்து நடந்த இடமும் நங்கள் வசிக்கும் இடமும் தூரமாக இருந்ததால் எங்களால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை, பின்னர் அவரை மீட்புக்குழுவினர் அழைத்துச் சென்றனர்.

பின்னர், ஒருவர் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தபோது தான் தண்ணீர் கேட்ட நபர் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் என்பது எனக்குத் தெரிந்தது” என்று சிவகுமார் கூறினார்.

சிவகுமார் மேலும் கூறுகையில்,”மிகப்பெரிய தளபதி, நம் தேசத்தை காப்பாற்றுபவர், அவர் என்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டு கொடுக்க முடியவில்லையே என மிகவும் வருத்தப்பட்டேன், பின்னர் அவர் இறந்துவிட்டார் என கேள்விப்பட்டதும் என்னால் இரவு முழுவதும் தூங்கமுடியவில்லை” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *