கரடி என்று நினைத்து மனிதனை சுட்டுக் கொன்ற செல்வந்தர்!

ரஷ்யாவைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர், கரடி என நினைத்து மனிதரைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கம்சட்கா (Kamchatka) பகுதியில் உள்ள ஒஸெர்னோவ்ஸ்கி (Ozernovsky) என்ற கிராமத்தில் ஆகஸ்ட் 2-ஆம் திகதி நடந்துள்ளது.

55 வயது இகோர் ரெட்கின் (Igor Redkin), அந்தக் கிராமத்தின் குப்பை போடும் இடத்தில் கரடி இருக்கிறது என்று கேள்விப்பட்டதாக ரஷ்ய ஊடகத்திடம் கூறினார்.

அதைப் பயமுறுத்துவதற்காகத் தமது துப்பாக்கியைக் கொண்டு சுட்டதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் பிறகு தான், அந்தப் பகுதியில், அதே நேரத்தில் உள்ளூர்வாசி ஒருவர் காயப்பட்ட தகவலைப் பெற்றதாக ரெட்கின் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த அந்த 30 வயது நபர் (Andrei Tolstopyatov), பின்னர் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என கூறப்பட்டது. அதன் தொடர்பில் சென்ற வாரம் வழக்குத் தொடங்கப்பட்டது.

கம்சட்கா தீபகற்பத்தில் ரெட்கின் சில பெரிய நிறுவனங்களின் துணை உரிமையாளர். ரஷ்யாவின் பொதுத்துறை ஊழியர்களில் மிகப் பெரிய பணக்காரர்களில் ரெட்கின்னும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்மானிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளப்போவதாக அவர் கூறியுள்ளார். விசாரணையின்போது இரண்டு மாதங்களுக்கு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *