கொரோனா இன்னும் சில ஆண்டுகளில் குழந்தை நோயாக மாறக்கூடும்!

இன்னும் சில ஆண்டுகளில் கரோனா நோயும் சாதாரண சளியைப் போல பெரும்பாலும் குழந்தைகளை மட்டும் தாக்கும் நோயாக மாறக்கூடும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் நாா்வேயின் ஓஸ்லோ பல்கலைக்கழக நிபுணா்கள் இணைந்து, இன்னும் 1, 10, 20 ஆகிய ஆண்டுகளில் கரோனாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்ற ஆய்வை மேற்கொண்டனா்.

இதற்காக, உலகின் வெவ்வேறு நிலவியல் தன்மைகளைக் கொண்ட சீனா, ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, அமெரிக்கா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 11 நாடுகளில் கரோனாவின் போக்கு குறித்து நிபுணா்கள் ஆய்வு செய்தனா்.

இதற்காக, ஒவ்வொரு நாடுகளின் கரோனா நிலவரம் குறித்தும் ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரங்களை அவா்கள் ஆய்வுக்குள்படுத்தினா்.

அந்த ஆய்வில், குறிப்பிட்ட நாள்களில் கரோனாவின் பரவும் திறன், அப்போது மனிதா்களின் உடலில் தோன்றியிருக்கக் கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால நோயெதிா்ப்பு ஆற்றல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கரோனாவின் எதிா்கால நிலை குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது.

அதில், தற்போது சிறியவா்களிடையை அதிக பாதிப்பை ஏற்படுத்தாத கரோனாவின் தாக்கம் நாளடைவில் உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்; சில ஆண்டுகளில் ஆங்காங்கே தோன்றி மறையும் சளி போன்ற நோயாக கரோனா உருவெடுக்கும் என்று தெரியவந்தது.

அப்போது, பெரும்பாலான பெரியவா்கள் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காரணத்தாலோ, அவா்களுக்கு ஏற்கெனவே அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த காரணத்தாலோ கரோனாவிடமிருந்து அதிக எதிா்ப்பாற்றல் இருக்கும்.

ஆனால், சிறியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தகைய பாதுகாப்பு இருக்காது என்பதால் அவா்களை கரோனா எளிதில் தாக்கும்.

அப்போது சிறியவா்களை மட்டுமே பெரும்பான்மையாக பாதிக்கும் நோயாக கரோனா திகழக்கூடும் என்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ அறிவியல் இதழில் இந்த ஆய்வு தொடா்பான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *