அமெரிக்காவில் அனைத்து பகுதிகளிலும் நிறம் மாறியதால் பதற்றம்!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதை அணைக்கும் பணியில் வனத்துறை, தீயணைப்பு துறையும் இணைந்து, இதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள 21 நகரங்களில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
மின்சார ஒயர்கள் மின் உபகரணங்கள் மூலமாக புதிதாக தீ விபத்து ஏற்படுவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ வேகமாக பரவுவதால், இந்த மாகாணத்தில் உள்ள 8 தேசிய காடுகளில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. காட்டுத் தீயால் மாகாணம் முழுவதும் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், மற்ற பகுதிகளிலும் புதிதாக தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி இதுவரை 900 முறை காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள தீயின் கோரத்தாண்டவத்தால் 20 லட்சம் ஏக்கர் பச்சைப் பசேல் வனப்பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது.

மேலும், இந்த காட்டுத் தீயால் சான் பிரான்சிஸ்கோவின் அனைத்து பகுதிகளும் ஆரஞ்சு நிறமாக காட்சி தருகின்றது. காலை எது மாலை எது என காலநிலை உள்ளதால் மக்கள் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல, வேறு கிரகத்தில் உள்ளதை போன்ற உணர்வை தருவதாகவும் கலிபோர்னியா மக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே, 2020ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் பல்வேறு துயரங்கள் நடந்து வரும் நிலையில், கலிபோர்னியாவில் நடந்த இந்த காட்டுத்தீ விபத்தும் மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

* கலிபோர்னியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டு தீ, இதுவரை நடந்துள்ள தீ விபத்துகளில் மிகப்பெரிதாக கருதப்படுகிறது.
* இந்த காட்டுத்தீ ஒரே நாளில் 15 மைல்கள் அதாவது 24 கிமீ  தூரத்துக்கு  பரவியது.
* இதில், 56 சதுர மைல்கள் அதாவது 145.04 சதுர கிமீ சுற்றளவுக்கு எரித்து சாம்பலாக்கியது. கலிபோர்னியாவில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயில்19.6 லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது.  ஆனால், இந்தாண்டு 20 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நாசமாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *