பதவி ஏற்கத் தயாராகும் பைடன் அடம்பிடிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து, புதிய அதிபராக பதவியேற்பதற்கான பணிகளை ஜோ பிடென் தொடங்கி உள்ளார். அதே சமயம், தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப்புக்கு பல முனைகளில் இருந்தும் நெருக்கடி முற்றுகிறது. கடந்த 3ம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 290 எலக்டோரல் வாக்குகள் முன்னிலையுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளார். தற்போது ஜனாதிபதியாக உள்ள டிரம்ப் 214 ஓட்டுகளுடன் தோல்வியை தழுவி உள்ளார். ஒரு சில மாகாணங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர் குழு டிசம்பர் 14ம் தேதி ஓட்டெடுப்பு நடத்திய பிறகு தான் பிடென் 46வது அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

ஆனாலும், பெரும்பான்மை எண்ணிக்கையை பெற்று விட்ட அவரை அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பல உலக நாடுகளின் தலைவர்களும் பிடெனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரும் ஜனாதிபதி பதவியை ஏற்க தயாராகி விட்டார். தனது முதல் பணியாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதும், பொருளாதாரத்தை மீட்பதும் தான் என அறிவித்ததோடு அதற்கான நிபுணர் குழு அமைத்து வேலையையும் தொடங்கி விட்டார். அதோடு ஆட்சி மாற்றத்திற்கான நடைமுறையும் தொடங்கி உள்ளன.

வெள்ளை மாளிகையில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகளை கவனிக்கும், பொது சேவை நிர்வாகமும் பிடெனை புதிய அதிபராக அங்கீகரித்துள்ளது. ஆனால் டிரம்ப் மட்டும் இன்னும் விடாப்பிடியாக இருக்கிறார். தேர்தலில் முறைகேடு நடந்து விட்டது, வழக்கு போடப் போகிறேன் என தோல்வியை ஒப்புக் கொள்ளாமலே உள்ளார். வெள்ளை மாளிகையில் கோல்ப் விளையாடுவது உள்ளிட்ட தனது வழக்கமான பணிகளை செய்து கொண்டிருக்கும் அவர், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடருவதற்கான சட்டப் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். அவரது வழக்கறிஞர்கள் குழு ஆதாரங்களை திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

‘அடுத்த ஜனாதிபதி யார் என்பதை அறிவிக்க மீடியாக்கள் யார்?’ என கேள்வி எழுப்பும் டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப் போவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அவரது விசுவாசிகளும், ‘டிரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார். கடினமாக போராடுவார்’ என எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம், பல தலைவர்கள் டிரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக டிரம்ப்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் அறிவுரை கூறிய நிலையில், டிரம்ப்பின் மனைவி மெலனியாவும் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப்பை தனியாக சந்தித்த மெலானியா, தோல்வியை ஒப்புக் கொண்டு, வெள்ளை மாளிகையை விட்டு கெளரவமாக வெளியேறி விடலாம் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வெள்ளை மாளிகையின் முன்னாள் பணியாளர்கள் அமைப்பு கூட, டிரம்ப் தோல்வியை ஒப்புக் கொண்டு, சுமூகமாக ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. ஆனால் எதற்கும் வளைந்து கொடுக்காமல் விடாப்பிடியாக டிரம்ப் இருக்கிறார். இதனால், ஆட்சி மாற்றம் நிச்சயம் சுமூகமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

* இன்னும் 71 நாள் பாக்கி
டிசம்பர் 14ம் தேதி வாக்காளர்கள் குழு தேர்தல் நடத்தி அதிபரை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்வார்கள். பின்னர் செனட்டர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பிடென் அதிபராக பதவியேற்பார். அன்றைய தினம் மதியத்திற்குள் டிரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு கிளம்ப வேண்டும். இதனால், வெள்ளை மாளிகையை காலி செய்ய டிரம்ப்புக்கு மிச்சமிருப்பது இன்னும் 71 நாட்கள் மட்டுமே.

* மெலனியாவும் ஆதரவு
டிரம்ப்பின் தோல்வியை அவரது மனைவி மெலனியாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘அமெரிக்க மக்கள் நியாயமான தேர்தலுக்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு சட்டப்பூர்வமான, சட்டபூர்வமற்ற அனைத்து வாக்குகளையும் எண்ண வேண்டும்’’ என கூறி உள்ளார். தேர்தல் நேரம் முடிந்த பிறகு பெறப்பட்ட வாக்குகளை எண்ணக்கூடாது என டிரம்ப் பிடிவாதமாக இருக்கும் நிலையில் மெலனியா இவ்வாறு கூறியுள்ளார்.

* வழக்கு தொடர உரிமையிருக்கு: புஷ் கருத்து
குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிடென், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘‘பிடென் நல்ல மனிதர். நம் தேசத்தை ஒற்றுமையாக வழிநடத்திச் செல்ல அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்தல் நியாயமாக நடந்ததாக அமெரிக்க மக்கள் நம்புகிறார்கள். அதன் வெளிப்பாடும் தெளிவாகவே உள்ளது. அதே சமயம், தீர்க்கப்படாத விஷயங்களுக்கு முடிவு காண வழக்குகளை தொடர டிரம்ப்புக்கு முழு உரிமை உண்டு. மறுவாக்கு எண்ணிக்கை கோரவும் அவருக்கு உரிமை இருக்கிறது’’ என கூறி உள்ளார்.

* இந்தியர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
டிரம்ப் தோல்வியிலிருந்து இந்தியர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என சிவசேனா கட்சி கூறி உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அதன் தலையங்கத்தில், ‘‘அமெரிக்க அதிபராக இருக்க டிரம்ப் சற்றும் தகுதியுடையவரல்ல. கடந்த 4 ஆண்டில் டிரம்ப் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. இதனால் இந்த தேர்தலில் அவருக்கு எதிராக வாக்களித்து அமெரிக்க மக்கள் தங்கள் தவற்றை திருத்திக் கொண்டுள்ளனர். டிரம்ப்பின் தோல்வியிலிருந்து நாமும் எதையாவது கற்றுக் கொள்வது நல்லது’’ என கூறப்பட்டுள்ளது.

* அடக்கி வாசிக்கும் சீனா, ரஷ்யா
வர்த்தக போர், கொரோனா விவகாரத்தில் மோதல் என அமெரிக்கா  சீனா உறவு பாழடைந்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிபர் டிரம்ப் தான். சீனா மீது நேரடி குற்றச்சாட்டுகளை சுமத்தி, உலக அளவில் அந்நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்திய பெருமை டிரம்ப்பையே சாரும். எனவே டிரம்ப் மீண்டும் அதிபராகக் கூடாது என்பதே சீனாவின் விருப்பமாக உள்ளது. ஆனாலும், அமெரிக்க தேர்தல் தொடங்கியதில் இருந்து இதுவரை சீனா எந்த ஒரு கருத்தையும் நேரடியாக கூறவில்லை. ரொம்பவே அடக்கி வாசிக்கிறது. இப்போது கூட அனைத்து உலக நாடுகளும் பிடெனுக்கு வாழ்த்து தெரிவிக்க, சீனா மட்டும் ‘‘இன்னும் ஓட்டெடுப்பு முழுமையாக முடியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அதற்குள் யாருக்கும் வாழ்த்து கூற முடியாது’’ என்று கூறியுள்ளது. இதே போல ரஷ்யாவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, வாழ்த்தும் கூறவில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *