கர்ப்பிணி தாதி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு

கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடுகிற உண்மையான வீரர்கள், வீராங்கனைகள் யார்? என்றால் அவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர்கள்தான் உண்மையிலேயே உயிரைப்பணயம் வைத்து தங்கள் கடமையை… இல்லை சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய உயிருக்கு சவால்களும், சோதனைகளும் தொடர்கின்றன. ஆனாலும், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று அவர்கள் புனிதப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த களத்தில் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன.

அப்படி ஒரு சம்பவம்தான் இப்போது இங்கிலாந்து நாட்டில் நடந்து இருக்கிறது.

லண்டன் மாநகரில் இருந்து 35 கி.மீ. வடக்கேயுள்ள லூட்டன் நகரில் உள்ள லூட்டன் அண்ட் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் கடந்த 5 ஆண்டுகளாக நர்சாக சேவை செய்து வந்தவர், 28 வயதேயான மேரி அகியேவா அகியா போங். இவர் ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்தவர். கர்ப்பிணி.

ஆனாலும் தன் வாழ்வையே இங்கிலாந்தில் என்.எச்.எஸ். என்று சொல்லப்படக்கூடிய தேசிய சுகாதார பணிகள் துறைக்கு அர்ப்பணித்து விட்டார்.

கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கூட இவர் அங்கு 12-வது வார்டில் இடைவிடாது தனது சேவையைத் தொடர்ந்து வந்தார். இந்த வார்டுதான், அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிற வார்டு ஆகும். மார்ச் 12-ந் தேதிவரை பணியில் தொடர்ந்து இருந்திருக்கிறார்.

இப்படி கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளுக்காக சேவையாற்றிக் கொண்டிருந்த மேரியையும் ஈவிரக்கமில்லாத கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டதுதான் பரிதாபம்.

ஏப்ரல் 5-ந் தேதி அவருக்கு கொரோனா தொற்றிக் கொண்டது மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.

அடுத்த 2 நாளில் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். முதலில் அவரது உடல்நிலை தேறுவது போல காணப்பட்டது. அவர் பிழைத்து விடுவார் என்று டாக்டர்கள் நம்பினர். ஆனால் அடுத்த ஓரிரு நாளிலேயே அவரது நிலை மோசம் அடைந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமானது.

என்ன செய்வது என்று மூளையைக் கசக்கிய டாக்டர்கள், மேரிக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை முதலில் காப்பாற்றி விடுவோம் என கருதினர். அதையே செய்தனர். சிசேரியனில் மேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மேரி என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ஆனால் ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை நாளில், நர்ஸ் மேரி உயிரை விட்டிருக்கிறார். இது அவரது குடும்பத்தினருக்கும், உடன் சேவையாற்றி வந்த டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் தீராத சோகத்தை தந்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக பாவம், அந்தக் குழந்தை மேரி, தன் வாழ்நாளெல்லாம் தாயின்றி வாழ வேண்டியதிருக்கிறது.

அதேநேரத்தில் என்.எச்.எஸ். டிரஸ்டின் தலைமை அதிகாரி டேவிட் கார்ட்டர், “மேரி ஒரு அற்புதமான நர்ஸ். இந்த துறை எதற்காக செயல்படுகிறது என்பதற்கு அவர் மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்தார். இந்த இருளான தருணத்தில், இந்த குழந்தைதான் நம்பிக்கை வெளிச்சம் அளிக்கிறது” என்று உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *