அமெரிக்காவில் கொரோனாவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக பலியாகும் நிலையில் ஊரடங்கை தளர்த்த தயாராகும் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக பலியாகி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு 3 கட்டங்களாக தளர்த்தப்படும் என அதிபர் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.  உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காதான். அங்கு கடந்த 10 நாட்களாக நாள்தோறும் சராசரியாக 2,000 பேர் பலியாகி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,174 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை 34,617 ஆக அதிகரித்துள்ளது. 6 லட்சத்து 77 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 5.8 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14 ஆயிரம் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், ஒரு மாதமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 90 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக, அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டி உள்ளது. மறுபுறம் பொருளாதார வீழ்ச்சியும் அச்சுறுத்துகிறது. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு அரசியல் ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கொரோனாவை விட பொருளாதாரமே முக்கியம் என்ற கட்டத்திற்கு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.  அவர் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை தாண்டி விட்டது. இருந்தாலும், அமெரிக்க மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு என்பது கொரோனாவுக்கு நீண்ட கால தீர்வாக இருக்காது.
அனுமதி கிடைத்ததால் ஆரோக்கியமான மக்கள் வேலைக்கு திரும்ப தயாராக இருக்கிறார்கள்.

எனவே, எனது நிர்வாகம் மாகாண ஆளுநர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளது. அதன்படி, 3 கட்டங்களாக ஊரடங்கை தளர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாகாணங்களின் நிலைமையை பொறுத்து மாகாண ஆளுநர்கள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்,’’ என்றார். அமெரிக்காவில் கொத்து கொத்தாக மக்கள் மடிந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 606 பேர் இறந்துள்ளனர். இது கடந்த சில நாட்களை ஒப்பிடுகையில் குறைந்த பலி எண்ணிக்கையாகும். ஆனாலும், நியூயார்க்கில் மே 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் மட்டுமே 16,106 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்ய போகிறார்?முதல் கட்டம்

  • புதிதாக வைரஸ் பாதிப்போர் எண்ணிக்கை குறைவான பகுதிகளில் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்ற தடையை தளர்த்தலாம்.
    2வது கட்டம்
  • பணியிடங்கள் வழக்கம் போல் செயல்படலாம்.
  • பொது இடங்கள் வழக்கம் போல் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
  • அத்தியாவசியம் இல்லாத பயணங்கள் அனுமதிக்கப்படும்.
  • வது கட்டம்
  • தனி மனித இடைவெளியுடன் பொது இடங்களில் மக்கள் கூடலாம்.
  • தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள் இன்றி தொழிலாளர்கள் பணி புரியலாம்.
  • மதுபானக் கூடங்கள் முழுமையாக இயங்கலாம்.

10 அலை வீசக்கூடும்
அமெரிக்காவுக்கு பிறகு இங்கிலாந்தில் தான் அதிக பாதிப்பு நிலவுகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 861 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 13,729 ஆக அதிகரித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில், ‘இங்கிலாந்தில் முதல்கட்ட கொரோனா பாதிப்பில் 40 ஆயிரம் பேர் வரை இறக்கக் கூடும். மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்குள், இதுபோல் 10 அலைகள் வீசக்கூடும்,’ என்று பீதியை கிளப்பி உள்ளது.

1.50 லட்சத்தை நெருங்குகிறது
உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.50 லட்சம் என்ற புதிய உச்சத்தை நெருங்கி இருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 357 ஆக இருந்தது. அமெரிக்காவில் 34,617 பேரும், ஸ்பெயினில் 19,315 பேரும், இத்தாலியில் 22,170 பேரும் பலியாகி உள்ளனர்.

இந்தியாவுக்கு 45 கோடி உதவி
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.45 கோடி மருத்துவ நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிதி, வைரஸ் பரவல் தடுப்பு, சிகிச்சை அளித்தல், நோயாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதேபோல், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் அமெரிக்கா நிதி உதவி செய்துள்ளது.

மார்தட்டிய ரஷ்யாவுக்கும் ஆப்பு அடித்த கொரோனா
ரஷ்யாவில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. தனது நாட்டில் இந்த வைரஸ் நுழையாமல் தடுத்து விட்டதாக ரஷ்யா பெருமையாக கூறிக் கொண்டிருந்தது. தற்போது, அங்கு நிலைமை மோசமாகத் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,070 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நோய் பாதித்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 273 பேர் இறந்துள்ளனர். இதில் 41 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர். அடுத்த 2, 3 வாரத்தில் நோய் தொற்று உச்சத்தை எட்டும் என்றும், உயிர் பலி பயங்கரமாக இருக்கலாம் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

தென்கொரியாவில் குணமான 163 பேருக்கு மீண்டும் அறிகுறி
தென் கொரியாவில் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மைய இயக்குநர் ஜியோங் என் கியோங் கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘இதுவரை 7,829 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர். அவர்களில், சராசரியாக 13.5 நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு அதிகபட்சமாக 35 நாள் இடைவெளியில் மறுபரிசோதனை செய்ததில் 163 பேருக்கு 2வது முறையாக லேசான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மூலமாக நோய் பரவும் அபாயம் குறைவாகவே உள்ளது’’ என்றார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *