அரசாங்கம் கொரோனா பற்றிப் பேசுவதற்கே அஞ்சுகின்றது!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தேர்தலைப் பிற்போட்டால் தோல்வியடைய நேரிடும் என்பதால் கொரோனா பற்றிப் பேசுவதற்கே அரசாங்கம் அஞ்சுகின்றது. பொதுத்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டால் என்ன நடக்கும்? அதுவரையான காலத்திற்குள் அரசாங்கத்தின் இயலாமையை மேலும் பலர் அறிவதற்கு வாய்ப்பேற்படும்.

எனவேதான் கொரோனா வைரஸ் பரவலினால் மக்கள் மரணித்தாலும், எவ்வாறேனும் தேர்தலை நடத்திமுடித்து விடவேண்டும் என்று அரசாங்கம் நினைக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

நுவரெலியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நடத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந்தளவானோரையே பிரசாரக்கூட்டங்களுக்கு உள்வாங்கமுடியும். எனினும் இவ்வனைத்துக் கட்டுப்பாடுகளும் எமக்கு மாத்திரமானதா? என்ற சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் ஜனாதிபதி, பிரதமரின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொள்கின்றனர். குறைந்தபட்சம் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் வேலைநிறுத்தத்தையேனும் முடிவிற்குக்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நான் முதன்முதலாக 1972 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக இங்கு வந்தேன். அதன் பின்னர் காமினி திஸாநாயக்க, நவீன் திஸாநாயக்க ஆகியோருக்காகவும் வந்திருப்பதுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றையும் இங்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்ஜெயவர்தனவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட திட்டங்களினால் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. கடந்த காலத்தில் எமது கட்சி ஆட்சிபீடத்திலிருந்த போது ரணசிங்க பிரேமதாஸ, நவீன் திஸாநாயக்க போன்றோரும் பெருந்தோட்ட மக்களுக்குப் பெருமளவில் சேவையாற்றியிருக்கின்றனர்.
நான் கல்வியமைச்சராக இருந்தபோது பெருந்தோட்டப் பாடசாலைகள் நாட்டின் தேசிய பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உள்வாக்கப்பட்டு, அவற்றுக்குப் புதிய கட்டடங்களை நிர்மாணித்துக் கொடுத்ததோடு ஆசிரியர்களையும் பணியமர்த்த நடவடிக்கை எடுத்தோம். அதுமாத்திரமன்றி எமது நாட்டிற்குப் பெருமளவான வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு சொந்தக் காணிகளை வழங்குவதற்கும், பெருமளவானோருக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்தோம்.
இவ்வாறு நாம் மலையகத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமளவு சேவைகளையாற்றியிருப்பதுடன், பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்திருக்கிறோம். எனவே இந்த நாட்டுமக்களிடம் வாக்குக்கேட்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிமை இருக்கின்றது. இன்றளவில் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகின்றது. தொற்றாளர்களைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் முனைப்பைக் காண்பிக்கவில்லை.
அதுகுறித்து நாமும், பல்வேறு சுகாதார அமைப்புக்களும் வலியுறுத்தி வந்திருக்கின்ற போதிலும் அரசாங்கம் எந்தவொரு பிரதிபலிப்பையும் காண்பிக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தேர்தலைப் பிற்போட்டால் தோல்வியடைய நேரிடும் என்பதால் கொரோனா பற்றிப் பேசுவதற்கே அரசாங்கம் அஞ்சுகின்றது.
பொதுத்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டால் என்ன நடக்கும்? அதுவரையான காலத்திற்குள் அரசாங்கத்தின் இயலாமையை மேலும் பலர் அறிவதற்கு வாய்ப்பேற்படும். எனவேதான் கொரோனா வைரஸ் பரவலினால் மக்கள் மரணித்தாலும், எவ்வாறேனும் தேர்தலை நடத்திமுடித்து விடவேண்டும் என்று அரசாங்கம் முயற்சிக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *