பிக்குகளை அவமதித்தமையாலேயே நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டதாம்! – வக்காளத்து வாங்குகின்றார் கோட்டா

“இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால்தான் முல்லைத்தீவு – நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இறந்த விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை அமைதியான ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள்.

இந்தச் சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தினரையும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று இந்த விவகாரத்தை ஊதிப்பெருக்கினார்கள். இது தேவையில்லாத நடவடிக்கை.

அதற்காக நீதிமன்றத்தின் உத்தரவைவோ – தீர்ப்பையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. களத்தில் என்ன நடந்தது என்று உண்மையில் எனக்குத் தெரியாது.

அண்மைக்காலங்களில் பிக்குகளை அவமதிக்கும் வகையில் – அவர்களைச் சீண்டும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *