காவியுடையில் வெறியாட்டம் போடாதீர்கள்! – ராஜித காட்டம்

“இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது. நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் அவமானம்.”

– இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் நேற்றுத் தகனம் செய்யப்பட்டது. இதனால் நேற்று அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாடு அனைத்து இனத்தவர்களுக்கும் – சகல மதத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இதில் நான் பெரிது – நீ சிறிது என்ற பாகுபாடு வேண்டாம். நாட்டின் நீதித்துறைக்கு அனைவரும் தலைவணங்கியே ஆக வேண்டும்.

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் பிக்குகள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது. இது இறந்த விகாராதிபதியை அவமதிக்கும் செயலாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *