பிக்குகளின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்! – பிரதமர் ரணில் தெரிவிப்பு

“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அப்பாலுள்ள இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று நண்பகல் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி ஆலய வளாகத்துக்குள் – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் நேற்றுப் பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டமையால் நேற்று மாலை வரை அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு – நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அதனை மீறி – நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.

கொழும்பிலிருந்து சென்ற பிக்குகள் தலைமையிலான குழுவினரே சர்ச்சைக்குரிய இடத்தில் – இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள். இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *