உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்குக! – சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறார் சு.கவின் பொதுச் செயலர் தயாசிறி

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச சமூகம் அதிருப்தி தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு சர்வதேச சமூகத்துக்கு எவ்விதத் தார்மீக உரிமையும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பில் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என சர்வதேச ரீதியில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நிறைவேற்று அதிகாரத்துக்கேற்ப இராணுவத் தளபதியை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் காணப்படுகின்றது. இராணுவத் தளபதியை மாத்திரமின்றி சகல அரச நியமனங்களிலும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது. எனவே, அரசமைப்புக்கேற்ப தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததில் எவ்விதத் தவறும் கிடையாது.

சவேந்திர சில்வாவுக்கு எதிராக கொலை, காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட போர்க் குற்றங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. அவ்வாறு அவருக்கு எதிராக போர்க்குற்றங்கள் காணப்படுமானால் அவை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படுவதோடு, அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாம்.

அதனை விடுத்து அவரது நியமனம் தொடர்பில் எதிர்ப்புக்களையும், ஜனாதிபதி மீதான விமர்சனங்களையும் முன்வைக்க முடியாது. அவற்றை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

சர்வதேச அமைப்புக்களுக்கும், நாடுகளுக்கும் ஏனைய நாடுகள் தொடர்பில் பொறுப்பும் கடமையும் காணப்படுகின்றது. எனினும், இவ்வாறு அரச நியமனங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *