காலம் தவறியபோதும் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது! – நஸீர் கருத்து

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம்தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மாகாண சபைத் தேர்தலை நடத்த வழிசெய்யும் விதத்தில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஒன்றைத் தனிநபர் பிரேரணையாக முன்வைத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். இது சிறந்த – ஆக்கபூர்வமான வழிமுறையாகும்.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழேயே கடந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. நல்லாட்சி அரசு அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், புதிய தேர்தல் முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்தும் நோக்கோடு 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி, 2017ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அந்தச் சட்டத்தின் கீழ் விகிதாசாரப் பிரதிநித்துவம் மற்றும் தொகுதிவாரி கலந்த இரட்டைத் தேர்தல் முறை பிரேரிக்கப்பட்டிருந்தமையால் அச்சட்டத்தின் கீழ் மாகாணங்கள் தோறும் தொகுதிகள் பிரிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் செய்யவேண்டிருந்தது. ஆனால், எல்லை நிர்ணய விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்ட காரணத்தால் இது இழுபறி நிலையை அடைந்தது.

இந்தப் பின்புலத்தில்தான் 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் இரத்துச் செய்யப்பட்ட 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தைத் திரும்பக் கொண்டு வருவதற்கான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் சுமந்திரன். அவருக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *