சவேந்திர சில்வாவின் கடைவாயில் இப்பவும் வடிகிறது தமிழர் இரத்தம்! – நாடாளுமன்றில் சிறிதரன் சீற்றம்

பிஸ்கட்டை கையில் கொடுத்து பாலச்சந்திரனை இவர்தான் கொன்றார் எனவும் கொதிப்பு

“தமிழ் மக்களின் இரத்தம் குடித்த சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னமும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் அபாயகரமானது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புலமைச் சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 20ஆம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போன சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று இந்த நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவேன், மீண்டும் ஜனாதிபதியாக ஆசைப்பட மாட்டேன் என்றெல்லாம் உறுதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த, இன்றும் இறுமாப்புடன் இன்னும் கொல்லுவேன் என்று சொல்கின்றவரை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னோர் இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

சவேந்திர சில்வாதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சுட்டுக் கொன்றவர். இசைப்பிரியாவை சுட்டுக் கொன்றவரும் இவர்தான்.

தமிழ் மக்களின் இரத்தம் குடித்த சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னமும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் அபாயகரமானது. தமிழர்களான நாங்கள் இவரின் நியமனத்தை ஏற்கவில்லை

நாட்டின் புலமைச் சொத்துக்களைப் பாதுகாப்பது தொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், சிங்களப் பாடல்களை மாத்திரம் பாதுகாக்கும் வகையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அனைத்து இனங்களின் புலமைச் சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது நாங்களும் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்போம். ஆனால், தமிழ் வீரப்பாடல்களை யாராவது பாடினால் அவரைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நிலையே இருந்து வருகின்றது” – என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *