அழுத்தம் திருத்தமான பேராயரின் கருத்து பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரிய ஒன்று! – நஸீர் தெரிவிப்பு

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக்கூறவேண்டிய அவசியம் கிடையாது. இதற்கான முழுமைப் பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும். இந்தத் தாக்குதல் சர்வதேசத்தின் தலையீடு காரணமாகவே நடத்தப்பட்ட ஒன்றாகவே நான் கருதுகின்றேன் எனப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியிருப்பது, நடந்த உண்மையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைப்பதாக வே அமைந்துள்ளது. எந்தவித தயக்கமும் இன்றி பேராயர் முன்வைத்துள்ள கருத்தை நான் பாராட்டி வரவேற்கிறேன்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடைபெற்று மூன்று மாதங்கள் பூர்த்தியாகிய நிலையில் நடைபெற்ற விசேட வழிபாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்துள்ள பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யதார்த்தமான நிலைமைகள் குறித்து தெளிவுபடக் கூறியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சட்டவாக்கத்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை. பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருந்த புலனாய்வுத் தகவல்களை எவரும் கண்டுகொள்ளாதமையே இந்த நிலைமை ஏற்பட முக்கிய காரணமாகும் எனப் பேராயர் தமது கருத்தைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். இதுவே உண்மை. இவை அனைத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், அரசு தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது.

உண்மையில் நேர்மையான ஜனநாயகமுள்ள அரசாக இந்த அரசு இருந்திருக்குமானால் அனைத்துப் பொறுப்பும் தன்னுடையது என்பதையும் – அதில் தவறு நேர்ந்துள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு உடன் பதவி விலகி மக்கள் கருத்தை அறியத் தேர்தலைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அரசு இந்த விடயத்திலும் தவறிழைத்துள்ளது.

இந்தநிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகளை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தமக்கு இதுவரையில் எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அந்த அறிக்கையின் மூலப்பிரதியைக்கூடத் தாம் பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ள பேராயர், கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மீதோ அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மீதோ எந்தவித நம்பிக்கையும் எமக்கு இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளமையும் ஏற்புடைய ஒன்றே.

தத்தமது வாக்காளர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இனத்தையும் மதத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கும் மாத்திரம் செயற்படாது பொது நோக்கத்துக்காகச் செயற்படுமாறு சகல அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளமை பாராட்டத்தக்கதே.

கிறிஸ்தவ மக்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலானது உண்மையில் மிகவும் கண்டிக்கதக்க ஒன்றாகும். எனினும், இந்தத் தாக்குதலில் அடிப்படைத் தன்மையைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு கிறிஸ்தவ மதத்தின் ஆன்மீகத் தலைவர் என்ற முறையில் தமது கருத்தைத் தொடர்ந்து நியாயமான முறையில் பதிவு செய்துவரும் பேராயர் மெல்கம் ரஞ்சித், கிறிஸ்தவ மக்களைச் சரியான பாதையில் வழிநடத்தி நாட்டில் ஐக்கியமும் சமாதானமும் நல்லிணக்கமும் மேன்மை பெற உழைத்து வருகின்றார் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இனிமேலாவது அரசு தனது தவறுகளை உணர்ந்து சரியான முடிவை எடுத்துச் செயற்பட வேண்டும் என்பதை வலிறுத்த விரும்புகின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *