கொரோனா காலத்தில் பிறக்க இருக்கும் இரண்டு கோடி குழந்தைகள் நெருக்கடியில்!

கொரோனாவை கொள்ளை நோய் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் அறிவித்த மார்ச் 11 முதலே உலகைப் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்தியா உட்பட உலகம் முழுதும் எல்லா நாடுகளுமே முழு ஊரடங்குக்குள் சென்றன. கிட்டதட்ட இரண்டு மாதங்களாக எந்த வருமானமும் இல்லாமல் அரசுகளின் கஜானா காலியாகத் தொடங்கின.

பல நாடுகள் திவால் நிலைக்குச் சென்றுவிட்டன. உலகப் பொருளாதாரமே படுத்துவிட்டது.மறுபுறம் பல லட்சம் பேர் கொரோனா தொற்றால் அவதிப்படுகிறார்கள். பல்லாயிரம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இன்னொரு புறம் வழக்கமான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் சரியான சிகிச்சைகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகமே இப்படித் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்தான் பல லட்சம் புதிய குழந்தைகள் நாள்தோறும் மண்ணுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இன்னமும் பல கோடி பிஞ்சுகள் இந்த பூமிக்கு வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
அவர்கள் நிலை என்னாகுமோ என கவலை தெரிவித்திருக்கிறது யூனிசெஃப்.பொதுவாக, ஒரு குழந்தை அன்னையின் கருவில் நாற்பது வாரங்கள் வரை இருந்த பிறகு இந்த மண்ணுக்கு வரும் என்று கணக்கிட்டால் – கொரோனாவை சர்வதேசப் பெருந்தொற்றாய் அறிவித்த மார்ச் 11 முதல் நாற்பது வாரம் என்பது டிசம்பரில் வருகிறது.
இந்தப் பத்து மாதங்களில் சுமார் இரண்டு கோடி பச்சிளம் குழந்தைகள் பிறக்கவுள்ளன என்று யூனிசெஃப் கூறுகிறது.இது மிகப் பெரிய எண்ணிக்கை. கொரோனாவோடு நாம் போராடுவதைப் போலவே இந்தப் பச்சிளம் குழந்தைகளும் போராட வேண்டியதாக இருக்கும். அது நிச்சயம் மிகப் பெரிய சவால்.
பொதுவாகவே, இந்தியாவில் பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுஜென்மம்தான். போதுமான மருத்துவ உட்கட்டமைப்புகள் இல்லாத நிலையில் உலகம் முழுதும் ஆண்டுதோறும் பேறுகால மரணங்களால் மட்டும் இரண்டு கோடியே எண்பது லட்சம் தாய்மார்கள் இறக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு 11 விநாடிக்கும் ஒரு தாய் இறக்கிறாள். இந்த விகிதம் இந்தியாவில் அதிகம்.
கொரோனா என்ற கொள்ளை நோய்க்கு எதிராக ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் போராடும் சூழலில், பிரசவங்களை கவனிக்க போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாத அவலம் உருவாகியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே கொரோனா போரில் தீவிரமாக இருப்பதால், பிரசவத்தை எதிர்கொள்ளவிருக்கும் தாய்மார்களுக்கும் சிசுக்களுக்கும் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.இந்தியா என்றில்லை. உலகம் முழுதுமே இது ஒரு மிகப் பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வரும் டிசம்பருக்குள் சீனாவில் ஒரு கோடியே 35 லட்சம் குழந்தைகளும், நைஜீரியாவில் 65 லட்சம் குழந்தைகளும் பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேஷியாவில் 40 லட்சம் குழந்தைகளும் இந்த கொரோனா சூழலில் பிறக்கவுள்ளார்கள்.இதில், சீனா மட்டுமே மிகச் சிறந்த உட்கட்டமைப்பு கொண்டுள்ள நாடு. ஆனாலும் அங்குமே பேறுகால மரணத்தை இன்னமும் கட்டுப்படுத்த இயலவில்லை. சாதாரண காலங்களிலேயே இந்நாடுகளில் பிரசவகால சிக்கல்கள் அதிகம் என்ற நிலையில் இந்த அசாதாரண சூழலை யோசிக்கவே அச்சமாக உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே ஒரே உணவு. ஆனால், அன்னைக்கு கொரோனா தொற்று இருந்தால், குழந்தைக்கு அதை கொடுக்க இயலாத சூழல் ஏற்படும். தாய்ப்பால் இல்லாவிடில் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, கொரோனா தொற்றும் அபாயம் அதிகரிக்கும். தாய்ப்பாலில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதே பச்சிளங் குழந்தைகளின் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதன் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இப்படியான நிலையில் தாய்ப்பால் கொடுக்கவியலாத சூழல் உருவானால் சிரமம்தான். அதேபோல், மார்ச் முதல் டிசம்பர் வரையான கர்ப்ப காலங்களில் அன்னையர்க்கு நடக்க வேண்டிய பரிசோதனைகள் முதல் ஒவ்வொரு மருத்துவ சேவையிலும் தடங்கல் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. இது, பிரசவகால சிக்கல்களை அதிகரிக்கும்.
சாதாரண பிரசவம் ஒரு மறுஜென்மம் என்றால் இந்த கொரோனா கால பிரசவங்கள் அதை இன்னமும் சிக்கலான விஷயமாக்கி இருக்கின்றன. வாழ்க்கை என்னும் போர்க்களத்தை பிறக்கும் போதே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அந்த பிஞ்சுகள்தான் பாவம்.நம் அரசுகள் இவ்விஷயங்களை எல்லாம் உடனடியாகக் கவனத்தில் கொண்டு அதிகப்படியான மருத்துவப் பணியாளர்களை தற்காலிகமாவது பணியில் எடுத்து சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். எந்த ஓர் உயிரின் மதிப்பும் எளிதானது அல்ல. அதிலும் நம்மை நம்பி இம்மண்ணுக்கு வரும் புதிய ஜீவன்களை காப்பாற்ற வேண்டியது நம் கடமை! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *