நீல பறவைக்கு பதில் கறுப்பு எக்ஸ் டிவிட்டரின் லோகோவை மாற்றுகிறார் எலான் மாஸ்க்?

 

டிவிட்டரில் தனது அடுத்த அதிரடியாக
நீல நிற பறவை லோகோவை கறுப்பு நிற எக்ஸ் ஆக மாற்றப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான டிவிட்டர் நிறுவனத்தை, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு தரும் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் விதித்தார். டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்டோரை மீண்டும் சேர்த்தார். செலவு குறைப்பு என்ற பெயரில் பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார். இப்படி தொடர்ச்சியான மாற்றங்களை செய்து வரும் மஸ்க் தனது அடுத்த அதிரடியாக டிவிட்டர் லோகோ, மற்றும் பெயரை மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில், ‘விரைவில் எல்லா நீல நிற பறவைகளுக்கு விடுதலை தரப்படும். டிவிட்டரின் லோகோ எக்ஸ் என மாற்றப்படும். இன்று இரவு எக்ஸ் லோகோ வெளியிடப்பட்டு, நாளை உலகம் முழுவதும் நேரடி பயன்பாட்டிற்கு அனுப்புவோம். இந்த மாற்றம் எப்போதோ செய்திருக்க வேண்டியது’ என குறிப்பிட்டார்.அதே போல, கறுப்பு நிற பின்னணியில் எக்ஸ் லோகோ மற்றும் பெயர் குறித்து குறும் வீடியோவையும் மஸ்க் வெளியிட்டார். டிவிட்டரின் நீண்ட கால அடையாளமாக நீல நிற பறவை லோகோ இருந்து வருகிறது. கடந்த ஏப்ரலில் கிரிப்டோகரன்சியான டாகிகாயினின் சிபா இனு நாய் படத்தை டிவிட்டர் லோகோவாக மஸ்க் மாற்றினார்.

சிறிது நேரத்தில் அது மீண்டும் நீல நிற பறவையாக மாற்றப்பட்டது. ஆனால் எக்ஸ் குறியீடு மஸ்க்கின் மிக விருப்பமான லோகோவாகும். அதுமட்டுமின்றி ஆரம்பத்தில் இருந்தே எக்ஸ் தளமாக டிவிட்டரை மாற்றப் போவதாக மஸ்க் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *