தேவதாசனின் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார் அமைச்சர் மனோ! – தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இரு வாரங்களுக்குள் அமைச்சரவைப் பத்திரம்

தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடித்து வைத்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் கடந்த 15ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

தன்னைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர் நீர்கூட அருந்தாமல் கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

மகஸின் சிறையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனகசபை தேவதாசன் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத் தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராவார்.

62 வயதுடைய தேவதாசன், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு வசதியளிக்குமாறு கோரியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையக் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட தேவதாசனுக்கு 2017ஆம் ஆண்டு கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

தனக்காக வாதாட சட்டத்தரணிகள் எவரையும் தேவதாசன் அப்போது அனுமதித்திருக்கவில்லை. மாறாக, தேவாசனே தனக்காக நீதிமன்றத்தில் வாதாடியிருந்தார்.

மேன்முறையீடு செய்வதற்குக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டத்தரணியின்றி மனு ஒன்றைத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு கோரி நீதி அமைச்சுக்குத் தேவதாசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை. இதனிடையே உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தேவதாசனை அச்சுறுத்தினர் எனவும் கூறப்படுகின்றது. ஆனாலும், தேவதாசன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

இந்தநிலையில், அமைச்சர் மனோ கணேசன் இன்று பகல் மகஸின் சிறைச்சாலை சென்று, தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை, இன்னும் இரு வாரங்களுக்குள், அமைச்சரவையில் நான் சமர்ப்பிக்கவுள்ளேன்.

எனது இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு, நான் தந்த ஒரு கிண்ணம் நீரை அருந்தி, தேவதாசன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட சம்மதித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக, சமர்ப்பிக்கப்படவுள்ள, இத்தகைய ஓர் அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளச் செய்ய அனைத்தையும் நான் செய்வேன்.

இதற்குத் தேவையான அரசியல் சூழல் நாட்டிலும், அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் விதத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுகின்றேன்” – என்றார்.

அமைச்சர் மனோ கணேசனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா ஆகியோரும் இன்று மகஸின் சிறைச்சாலை சென்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *